பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பொழுதுபோக்கு துறையில் (Entertainment Industry) நாட்டிலேயே அதிக வரி செலுத்துபவர் என வருமானவரித் துறை பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். கடந்த சில ஆண்டுகளாக நாட்டிலேயே அதிக வரி செலுத்துபவர் என வருமான வரித்துறையிடம் அவர் பாராட்டுச் சான்றிதழை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த வருடமும் 2020-21 நிதியாண்டிற்காக மீண்டும் இவர் அதிக வருமானவரி செலுத்தியதாக வருமானவரித்துறையில் இருந்து கவுரவச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் இணைதளத்தில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து அக்ஷய் குமார் இதை உறுதி செய்யவில்லை. முன்னதாக, தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தில் அதிக வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு வருமானவரித்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அக்ஷய் குமார் தற்போது டினு தேசாய் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான “சாம்ராட் பிருத்விராஜ்” என்ற படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக வரும் மாதங்களில் ரக்ஷா பந்தன், ராம் சேது மற்றும் செல்ஃபி என வரிசையாக பல படங்கள் அவரது நடிப்பில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.