நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (25) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் (Fuel pass) பிரகாரம் எரிபொருள் வழங்கப்படும் என்று மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பல்வேறு பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த முறை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதற்காக 4,708 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைக்கு அமைய QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். அதன்படி வாகன இலக்கத்தகடின் கடைசி இலக்கம் 0, 1 மற்றும் 2 ஐ உடைய வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், 3 ,4 மற்றும் 5 ஆகிய இலக்கங்களை கடைசியாக கொண்ட வாகனங்களுக்கு வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் 6 , 7 , 8 மற்றும் 9 ஆகிய இலக்கங்களில் கடைசியாக முடிவடையும் வாகனங்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருள் வழங்கப்படும்.
எவ்வாறாயினும், கடந்த வார இறுதியில் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உரிய கொடுப்பனவுகளை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தாத காரணத்தினாலேயே அவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என்றும் கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை என்பதனால் குறைந்த எண்ணிக்கையிலான பௌசர்களே எரிபொருள் களஞ்சியசாலைகளுக்கு வந்திருந்தன. எனவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காமைக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.