உக்ரைனில் இருந்து சிக்கலின்றி தானிய ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இனி ஏழ்மை நாடுகள் பசியாறும் என்றே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
ரஷ்யாவால் விதிக்கப்பட்ட தடையால் உலகின் சில ஏழ்மையான நாடுகளில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் ஒன்றிணைந்து, உக்ரைன் மற்றும் ரஷ்யாவை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் தானிய ஏற்றுமதி மொத்தமாக முடங்கியதை அடுத்து, உக்ரைனில் தற்போது 20 மில்லியன் டன் தானியங்கள் தேங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், இந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு இது 75 மில்லியன் டன்னாக உயரும் என்றார்.
இருப்பினும், போர் காரணமாக இந்த ஆண்டின் அறுவடை குறைவாகவே காணப்படும் என நம்பப்படுகிறது.
மேலும், உக்ரைன் வழக்கமாக உற்பத்தி செய்யும் 86 மில்லியன் டன் தானியங்களில் 30% அறுவடை செய்யப்படவில்லை என்றே நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து ஆண்டு தோறும் 3.62 மில்லியன் டன் கோதுமை எகிப்து இறக்குமதி செய்கிறது. இதேபோன்று 3.22 மில்லியன் டன் அளவுக்கு இந்தோனேசியா இறக்குமதி செய்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளுக்கான கோதுமை தேவையில் 40% அளவுக்கு உக்ரைனும் ரஷ்யாவும் அளித்து வருகிறது.
ஆனால், போர் காரணமாக ஆப்பிரிக்காவில் 30 மில்லியன் டன் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது கண்டம் முழுவதும் உணவு விலையில் 40% உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
போருக்கு முன்பு வரையில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 7 மில்லியன் டன் தானியங்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்துள்ளது.
ஆனால் போர் தொடங்கிய பின்னர் வெறும் 1.5 மில்லியன் டன் தானியங்களை மட்டுமே ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி செய்ய முடிந்ததாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.