நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இன்று 15 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
உதயநிதியின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் விஜய்யின் ‘குருவி’ படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்கியது. தொடர்ந்து சூர்யாவின் ‘ஆதவன்’, கமலின் ‘மன்மத அம்பு’, ‘ஏழாம் அறிவு’ உள்பட பல படங்களை தயாரிப்பதுடன் படவிநியோகத்திலும் ஈடுபட்டது. சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மதராசப்பட்டினம்’, என பல டிஸ்ட்ரிபியூஷனிலும் இறங்கியது. இந்த ஆண்டு ரஜினியின் ‘அண்ணாத்த’, நயன்தாராவின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ‘டான்’, கமலின் ‘விக்ரம்’, மாதவனின் ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது. அடுத்தும் ‘குலுகுலு’ ‘கோப்ரா’ அமீர்கானின் ‘லால்சிங் சத்தா’, திருச்சிற்றம்பலம்’, ‘வெந்து தணிந்தது காடு’ ‘சர்தார்’, ‘கேப்டன்’ ஆகிய படங்களை தனது பேனரில் வெளியிட காத்திருக்கிறது.
தனது பட நிறுவனம் 15வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரமாண்டமான விழா ஒன்றை இன்று சத்தமில்லாமல் கொண்டாடுகிறார் உதயநிதி. தான் இதுவரை வெளியிட்ட, தயாரித்த படங்களின் நடிகர் நடிகையர் தொழில்நுட்ப கலைஞர்கள் பலருக்கும் இந்த விழாவில் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கிறார் உதயநிதி. இந்த விழாவில் ரஜினி, கமல் முதல் அமீர்கான் வரை பலரும் பங்கேற்கிறார்கள் எனத் தகவல்.
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த விழா நடக்கிறது. விழாவின் ஸ்பெஷலாக இப்போது உதயநிதி, நிதி அகர்வால் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளனர். இப்படத்தின் படப்படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.