லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாராபங்கி மாவட்டத்தில் டபுள் டெக்கர் எனப்படும் இரண்டடுக்கு கொண்ட 2 பேருந்துகள் பிகாரில் இருந்து டெல்லி சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்துகள் நரேந்தர்பூ மாத்ரஹா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து நடந்தது. முன்னே சென்ற பேருந்து திடீரென நின்றபோது, அதிவேகமாக வந்த இரண்டாவது பேருந்து முன்னே சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாகினர். மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேர் ஹைதர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் லக்னோ விபத்து சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தரப் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார்.மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.