இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக ‘கடவுளின் பெயரால்’ அழுத்திக் கூறி பதவியேற்றுக் கொண்டார்.
நியமன எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டவர்கள் அனைவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜூலை 18 ஆம் தேதி பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இளையராஜா அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்ததால் அவர் பதவியேற்கவில்லை.
இந்த நிலையில், இளையராஜா இன்று (ஜூலை 25) மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அப்போது அவர், கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன் என்று அழுத்திக் கூறியது கவனம் பெற்றுள்ளது.
இசைஞானி இளையராஜா உறுதிமொழி ஏற்றபோது கூறியதாவது: “சட்டத்தினால் நிறுவப்பட்டதான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றியிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்க இருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று அழுத்திக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”