தாராபுரம் அருகே குடும்ப கஷ்டம் காரணமாக தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் (28). பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் நூல் ஆலையில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நூற்பாலை விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மனைவி பூங்கொடி (25) தாராபுரத்தில் உள்ள தனியார் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மகள் வர்ஷா (10,) அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பூங்கொடி, கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கணவனை இழந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தனது தாயாருடன் குடும்ப கஷ்டத்தில் பூங்கொடி வாழ்ந்து வந்தார். இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனது குழந்தை வர்ஷாவை தூக்கில் தொங்கவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய பூங்கொடியின் தாயார் சரஸ்வதி அம்மாள், தனது மகளும் பேத்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். சம்பவம் பற்றிய அறிந்த அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் மகள் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும் மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அலங்கியம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM