தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூர் மதகு சாலை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (24), மனோஜ் (23), ராஜேஷ்குமார் (29), கொளஞ்சி நாதன்(34) ஆகிய நான்கு பேரும் கடந்த 18-ம் தேதி இரவு கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் கரைபுரண்டு வந்தது. இதை எதிர்பார்க்காத நான்கு பேரும் அங்கு உள்ள மணல் திட்டத்தில் ஏறி நின்று கூச்சலிட்டனர்.
அப்போது கரையில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சிநாதன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். இதில் ஆகாஷ், மனோஜ் ஆகியோர் மணல்மேடு கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ராஜேஸை தேடும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் பகுதியில் ஆற்றின் மணல் திட்டுப் பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது . அதனை இன்று (25.07.2022) கண்ட அந்தப் பகுதி மக்கள் கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக கொள்ளிடம் போலீஸார், மீட்புக் குழுவினர் மற்றும் நீச்சல் வீரர்கள் அங்கு விரைந்து சென்று, திட்டுப் பகுதியில் கரை ஒதுங்கிய சடலத்தை படகு மூலம் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.
கரை ஒதுங்கிய சடலம் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, தேடப்பட்டு வந்த திருவிடைமருதூர் முள்ளங்குடி பகுதியைச் சேர்ந்த கார்மேகம் மகன் ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸார், உடல் அழுகிய நிலையில் இருப்பதால் கொள்ளிடம் ஆற்றின் கரைப் பகுதியில் உடற்கூறு ஆய்வு செய்யவிருக்கின்றனர்.