கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளில் உள்ள கொவிட் வார்டுகள் (Ward) நிரம்பி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IDH மருத்துவமனையில் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கொவிட் வார்ட் (Ward) தற்போது நிரம்பியுள்ளது. அதனால் கொவிட் நோயாளர்களுக்காக மற்றொரு வார்டை ஒதுக்க மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை மற்றும் வட கொழும்பு போதனா வைத்தியசாலை போன்ற பிரதான வைத்தியசாலைகளில் தற்போது அதிகளவான கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கொவிட் வார்டுகள் (Ward) தற்போது நிரம்பி வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்களில் அதிகமாக பரவி வருவது, ஒமிக்ரோன் வகையிலான கொவிட் வைரஸ் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நேற்று முன் தினம் (23) இலங்கையில், 72 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வாரம் மொத்தமாக 519 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும், நேற்று (24) வரையிலும் ஆறு இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து எழுநூற்று எழுபத்தி இரண்டு (664772) கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளதுடன், 16536 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளதாகவும், கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானது என்றும் தொற்றுநோயியல் பிரிவின், பிரதான தொற்றுநோயியல் நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசியின் காலாவதி திகதி, அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முடிவடைய உள்ளதனால், பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத அனைவரும் அதற்கு முன்னர் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், நேற்று (24) வரையிலும், 8,007,382 பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளதுடன், 15,280 பேர் நான்காவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.