கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கஞ்சா விற்பனையை தடுக்கவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை உட்பட சட்டவிரோத செயல்களை தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தவுட்டுபாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் இருக்கூரை சேர்ந்த கமல் என்பவரின் மகன் அக்பர் உசைனிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
இதேபோல, வேலாயுதம்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை ரகசியமாக விற்றுவந்த ஏழுமலை, குமாரசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 69 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து மாயனூர் அருகேயுள்ள காட்டூரில் வில்சன் என்பவர் வீட்டில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 169 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்த்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM