புதுடில்லி : சீனாவுடன் இந்திய தளபதிகள் மட்டத்திலானபேச்சுவார்த்தைக்கு பிறகும் கிழக்கு லடாக்கில்நிறுத்தியுள்ள இந்திய படையினரை தூண்டும் வகையில் சீன ஜெட் விமானங்கள் அத்துமீறி பறந்து செல்கின்றன. இந்தியாவும் போர் விமானங்களை அனுப்பி பதிலடி தந்து வருகிறது.கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதற்கு தீர்வு காண இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில்பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துஉள்ளன. இதன் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன. எனினும் டெம்சோக் தேப்சாங் பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வந்தது. இந்நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள்மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை 4 மாத இடைவெளிக்கு பின் கடந்த ஞாயிறு நடந்தது.இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத விவகாரங்களில் ராணுவ மற்றும் தூதரக வழிகளில் நெருங்கிய தொடர்புடன் இருந்து பேச்சுவார்த்தைகளின் வழியே பரஸ்பரம்ஏற்று கொள்ள கூடிய தீர்மானம் ஒன்றை இயற்றி வெகுசீக்கிரத்தில் தீர்வு எட்டப்படும் என இந்தியா மற்றும் சீனா இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தொடர்ந்து ஜே-11 உள்பட சீனாவின்போர் விமானங்கள் அத்துமீறி அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை நெருங்கி பறக்கின்றன. இதற்கு முன்பும்பலமுறை சீன ஜெட் விமானங்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளன.இது இந்திய பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்யும் முயற்சியாகும்.
இந்தியாவின் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 3 முதல் 4 வாரங்களாக சீன போர் விமானங்கள் பறந்து செல்கின்றன. இதற்கு இந்திய விமான படை பதிலடி நடவடிக்கை எடுத்து வருகிறது. மிக்-29 மற்றும் மிரேஜ் 2000 ஆகிய இந்திய போர் விமானங்கள் அனுப்பப்பட்டு ஒரு சில நிமிடங்களில் சீன நடவடிக்கைகளுக்கு பதிலடி தருகிறது. லடாக் பிரிவில் சீன நடவடிக்கைகளை நெருங்கி கண்காணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ள இந்திய விமான படை உட்கட்டமைப்பு ஆனது சீன ராணுவத்துக்கு பதற்றம் ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement