புதுடெல்லி: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மற்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் அசோலா பாட்டீ மைன்ஸ் என்ற இடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் ‘வன மகோத்சவ’ விழாவை நேற்று தொடங்கி வைக்க திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது.
வன மகோத்சவ விழா நடைபெறும் இடத்துக்கு டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் இரவு வந்தனர். அங்கு வன மகோத்சவ் நிகழ்ச்சிக்காக ஆம் ஆத்மி அரசு வைத்திருந்த பேனர்களை கிழித்து போட்டுவிட்டு பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த பேனர்களை வைத்தனர். இச்சம்பவம் அரவிந்த் கேஜ்ரிவாலை கண்டு பிரதமர் மோடி பயப்படுவதை காட்டுகிறது. ஆத் ஆத்மி அரசை களங்கப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அற்ப குற்றச்சாட்டுகளை கூறி, நிதி மோசடி வழக்கில் டெல்லி மின்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கைது செயயப்பட்டார். தற்போது துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சதி நடக்கிறது. முதல்வர் பங்கேற்கும் சிங்கப்பூர் நிகழ்ச்சியையும் முடக்கினர். இச்சம்பவத்தால் மரம் நடும் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்பதை முதல்வர் கேஜ்ரிவால் தவிர்த்தார்.
இவ்வாறு கோபல் ராய் கூறினார்.