சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 26, 27-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், தமிழகப் பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 25, 26, 28-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், 27-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 26-ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27-ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், நீலகிரி, கோவை,திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி,சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைபெய்யக்கூடும். வெப்பநிலை 26 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
தேவகோட்டையில் கனமழை: ஜூலை 24-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 7 செ.மீ. சென்னைஅம்பத்தூரில் 6 செ.மீ. கடலூர்மாவட்டம் கொத்தவாச்சேரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.