திருவள்ளூர்: “திருவள்ளூர் கீழச்சேரி தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்” என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 12-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகம் முன்பு ஏராளமானோர் குவிந்தனர். அசாம்பவிதச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளி வளாகத்தின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கல்யாண் கூறும்போது, “இந்தப் பள்ளியில் ஒரு விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளில் ஏதாவது மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அந்த தற்கொலை வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
அதன்படி, காவல் துறை புகாரை வாங்குவதற்காக காத்திருக்கிறோம். புகார் கிடைத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன், வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்படும். சிபிசிஐடி போலீஸார், உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி விசாரணை நடத்துவர்.
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் போலீஸார் எதுவும் செய்ய முடியாது. சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வர். மாணவியின் பெற்றோர் தரப்பில் இதுவரை புகார் அளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.