நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டில் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி மற்றும் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெறுகிறார்.

இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு முன்னதாக திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு திரவுபதி முர்முவை ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள திரவுபதி முர்முவுக்கு ராம்நாத் கோவிந்த் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மைய வளாகத்தில் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா திரவுபதி முர்முவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன் பின்னர் திரவுபதி முர்மு பேசியதாவது:-

“இந்த புதிய பொறுப்பை நிறைவேற்ற உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் எனக்கு பெரும் பலமாக இருக்கும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது வலிமை. இந்த பதவியை கவுரவிக்கும் வகையில் செயல்படுவேன்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.