லண்டன்: “பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தல்” என்று ரிஷி சுனக் ஆவேசமாகப் பேசினார்.
பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். சொந்த கட்சிக்குள்ளயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வருகிறார். சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவு தொடர்பான விவகாரங்களில் ரிஷி சுனக்கின் நிலைப்பாட்டை மற்றொரு போட்டியாளரான லிஸ் ஸ்ட்ராஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் ரிஷி சுனக் பேசியது: “பிரிட்டனின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, சர்வதேச பாதுகாப்புக்கே சீனா நம்பர் 1 அச்சுறுத்தல். சீன கம்யூனிஸ்ட் கட்சிகளை பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் இருந்து துரத்தியடிப்பேன்.
உயர் கல்வி நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் பற்றி வெளிப்படையாக அரசுக்கு தெரிவிக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும்.உள்நாட்டு உளவு அமைப்பான எம்15 M15, சீன நிறுவனங்கள் பிரிட்டனில் மேற்கொள்ளும் உளவு வேலைகளை குறித்து ஆராய்ந்து கண்காணிக்கும். இணையவெளியிலும் இந்த கண்காணிப்பு நீட்டிக்கப்படும்.
நமது தொழில்நுட்பத்தை சீனா திருடிக் கொண்டு நம் பல்கலைக்கழகங்களுக்குள் ஊடுருவுகிறது. உள்நாட்டில் தாய்வானை அடிமையாக்க அத்தனையும் சர்வாதிகாரத்தையும் பயன்படுத்துகிறது.
எல்லாம் போதும். பிரிட்டன் அரசியல்வாதிகள் இதுநாள் வரை சீனாவுக்கு சிவப்பு கம்பளம் விரித்தது போதும். இதுநாள் வரை பிரிட்டன் சீனாவின் சதித் திட்டங்களையும், உள்நோக்கம் கொண்ட லட்சியங்களையும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், நான் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்கும் முதல் நாளில் இருந்தே இதை மாற்றுவேன். தனது செயல்களுக்காக சீனா நிச்சயம் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்” என்று ரிஷி சுனக் பேசினார்.
யார் இந்த ரிஷி? – இந்தியா வம்சாவளியை சேர்ந்த ரிஷி, அரசியல் ஆர்வம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சில ஆண்டுகள் தீவிரமாக கட்சிப் பணியாற்றிய ரிஷிக்கு, 2014-ல் வடக்கு யார்க்ஷையர் ரிச்மாண்டு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்டையான ரிச்மாண்டு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி உள்ளார். இவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகனும் ஆவார்.