பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை பிடிக்க அக்கட்சி நிர்வாகிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஆர்.டி.ராமச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருப்பதால், அவரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி அண்மையில் கட்சியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து, தற்போது அந்தப் பதவியைப் பிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதராஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழ்ச்செல்வன், பூவை.செழியன், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.
இவர்களில், மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கப்பட்ட ஆர்.டி.ராமச்சந்திரன் சமூகத்தைச் சேர்ந்தவருக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுவதால், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் கர்ணன், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் சிவப்பிரகாசம் ஆகியோரில் ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது என கட்சியினரிடையே பேசப்படுகிறது. இந்த 2 பேரில் ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் கர்ணன் கட்சியில் மிகவும் சீனியர் என்பதால் அவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல, 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில்கூட பெரிதாக பங்கேற்காத முன்னாள் எம்.பிக்கள் மருதராஜா, சந்திரகாசி ஆகியோர் இப்போது மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்து கட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலைகாட்டி வருகின்றனர்.
மேலும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கான சாவியை பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, முன்னாள் எம்.பி சந்திரகாசி, பெரம்பலூர் புதிய பேருந்துநிலைய வளாகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார். இதேபோல, முன்னாள் எம்.பி மருதராஜா, பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மூலம் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்.
மேலும், முன்னாள் எம்எல்ஏக்கள் பூவை.செழியன், இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் இப்பதவியை பிடிக்க முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இதில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவு இருப்பதாலும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் பிரமாணப் பத்திரம் வாங்கும் பொறுப்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாலும், மாவட்டச் செயலாளர் பதவி நிச்சயம் தனக்குத்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்ச்செல்வன் உள்ளார்.
இதுதவிர, பெரம்பலூர் ஒன்றியச் செயலாளராக உள்ள செல்வக்குமார், மாவட்டத்தில் உள்ள 23 பொதுக்குழு உறுப்பினர்களில் 11 பேர் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், நகரச் செயலாளர் ராஜபூபதி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் தன்னை ஆதரிப்பதாலும் தனக்கே மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என கட்சியினரிடம் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
இவ்வாறாக, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை, சேலம், கோவை என பல்வேறு நகரங்களில் முகாமிட்டு, கட்சியின் உயர்நிலை நிர்வாகிகளை அணுகி மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளனர்.