நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு (64) இன்று பதவி ஏற்கிறார். இதனையொட்டி அவர் இன்று டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, கடந்த 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களித்தனர். கடந்த 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 64 சதவீத வாக்குகளுடன் திரவுபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
கடந்த 2017-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கிறார்.