சென்னை: சென்னையில் நடந்த வருமான வரி தின விழாவில், தனி நபர் வரி செலுத்துதல் பிரிவில், அதிக அளவு வரி செலுத்தியதற்காக, நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரஜினிகாந்த் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
தமிழகம், புதுச்சேரி மண்டல வருமான வரித் துறை அலுவலகம் சார்பில் 163-வது வருமான வரி தினம் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:
தமிழிசை: நாட்டின் வளர்ச்சிக்கு வரி வருவாய் என்பது முக்கியமானது. மக்கள் தாமாக முன்வந்து வரி செலுத்த செய்ய வேண்டும். ஒரு கடினமான செயலாக இல்லாமல், அதை இனிமையானதாக மாற்ற வேண்டும். வரி செலுத்துவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ‘நான் நேர்மையாக வரி செலுத்துகிறேன்’ என ஒவ்வொருவரும் தலைநிமிர்ந்து பெருமையுடன் சொல்ல வேண்டும். அனைவரும் வரி செலுத்தும் வகையில், அதற்கான தொழில்நுட்பத்தை எளிதாக்க வேண்டும். வரி செலுத்துபவர்கள் அவகாச நீட்டிப்பை எதிர்பார்க்காமல், குறிப்பிட்ட காலத்துக்குள் வரி செலுத்த வேண்டும்.
2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்ற பிரதமரின் கனவை நிறைவேற்ற, அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். இதன்மூலம், நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடையும். கரோனா பரவியபோது, மிக குறுகிய காலத்தில் நாம் தடுப்பூசி கண்டுபிடித்து உற்பத்தி செய்து பயன்படுத்தியதோடு, 150 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தோம்.
முனீஷ்வர்நாத் பண்டாரி: நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய, வரி செலுத்துவது இன்றியமையாதது. வரி செலுத்துவது அடிப்படை கடமை. இதை ஊக்கப்படுத்தும் வகையில், சட்டங்களை எளிதாக்க வேண்டும். வருமான வரித் துறை தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இதேபோல, குற்றச் செயல்களில் தண்டனை பெற்ற சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார் சீர்திருத்த பள்ளி, சிறார் இல்லங்களின் நிலைமையும், அப்பள்ளிகளில் உள்ள சிறுவர்களின் நிலைமையும் மிகவும் பரிதாபமாக உள்ளன. ராஜஸ்தானில் உள்ள சிறார் இல்லங்களை, வரி செலுத்துவோர் தத்தெடுத்து, அவற்றை மேம்படுத்தி தருகின்றனர். அதேபோல, தமிழகத்தில் உள்ள சிறார் இல்லங்களை மேம்படுத்த, வரி செலுத்துவோர், வருமான வரித் துறை முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த விழாவில், தனி நபர் வரி செலுத்துதல் பிரிவில், அதிக அளவு வரி செலுத்தியதற்காக, நடிகர் ரஜினிகாந்த் உட்பட 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரஜினிகாந்த் சார்பில் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, வருமான வரித் துறை மண்டல முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். வருமான வரி புலனாய்வு துறையின் தலைமை இயக்குநர் சுனில் மாத்தூர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.