கோவை சுற்றுப்புறங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே குழந்தைகளுடன் யாசகம் எடுப்பது, மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற மக்கள் சாலையில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆட் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களை மீட்டு வருகின்றனர்.
ஆதரவு இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளித்து அடைக்கலம் கொடுப்பது, சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்த்து வைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டோரை மீட்டு தொண்டாமுத்தூர் கெம்பனூர் அருகே ஓர் மலையடிவாரத்தில், வருவாய்த்துறையால் ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட ஒரு கிறிஸ்துவ தன்னார்வு நிறுவனத்தின் வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள்,
பணிக்கு சென்றவர்கள், அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க சென்றவர்கள், பேருந்துக்காக காத்திருந்தவர்களை போலீஸ் மற்றும் தன்னார்வு அமைப்பினர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக புகார் எழுந்தது. அவர்கள் மீது தாக்குதல் நடத்தி பெண்கள் உள்பட அனைவருக்கும் மொட்டை அடித்து, உடைமைகளை எரித்ததாக புகார் சொல்லப்பட்டது.
“சாலையில் சென்று கொண்டிருந்த சாமானிய மக்களை இழுத்து சென்று, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வு அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கோரிக்கை வைக்கப்பட்டது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அந்தப் பகுதியில் போராட்டத்தில் இறங்கினர்.
கிறிஸ்துவ தன்னார்வு நிறுவனத்துக்கு சொந்தமான வாகனத்தை கவிழ்த்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. விவகாரம் பெரிதானால் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சாலையில் இருந்து அழைத்து வந்தவர்கள் இன்று அதிகாலை மீண்டும் அவர்கள் இருந்த இடங்களிலேயே விடப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.