தமிழ் சினிமாவில் `முள்ளும் மலரும்’, `உதிரிப்பூக்கள்’, `நெஞ்சத்தைக் கிள்ளாதே’ போன்ற யதார்த்தமான படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் மகேந்திரன். சிவாஜியின் `கங்கா’ உட்படப் பல படங்களுக்கு கதை எழுதியவர். இவரது படங்கள்தான் இன்னமும் பல திரைப்படக் கல்லூரிகளில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன. நடிகராகவும் பரிணமித்த மகேந்திரன் விஜய்யின் `தெறி’யில் நடிகராக அறிமுகமானார். அவர் தனது கடைசி காலங்களில் பிரபுதேவா, சசிகுமாரின் படங்களில் நடித்தார். இன்று பிறந்தநாள் காணும் மகேந்திரனின் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார் `பொன் மாணிக்கவேல்’ படத்தின் இயக்குநரான முகில்.
“இன்னிக்கு காலையில இருந்து அவரோட நினைவுகள் சுழன்றுட்டே இருந்துச்சு. தங்கமான மனிதர். ஒருமுறை பேட்டி ஒன்றில் அவர்கிட்ட ‘இப்ப உள்ள நடிகர்கள்ல உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார்?’ன்னு கேள்வி கேட்டிருந்தாங்க. உடனே மகேந்திரன் சார், ‘பிரபுதேவா’ன்னு சொன்னார். பின்னாளில் அவர் பிரபுதேவா சார் படத்துல நடிப்பார். அது என் படமாவே இருக்கும்னு நான் நினைச்சதில்லை.
‘பொன் மாணிக்கவேல்’ படத்துல நஸரத்துல்லா கேரக்டருக்காக நிறைய பேரை பார்த்தோம். ஆனா, யாரும் திருப்தியா வரல. மகேந்திரன் சார் சரியா இருப்பார்ன்னு தோணுச்சு. அவர்கிட்ட கதையைச் சொன்னேன். முழுக்கதையையும் பொறுமையா கேட்டுட்டு ‘ஹீரோ யாருங்க?’ன்னு கேட்டார். ‘பிரபுதேவா சார்’ன்னு சொன்னதும், அவருக்கு அவ்ளோ சந்தோஷம். இந்த விஷயத்தை நான் பிரபுதேவா சார்கிட்டேயும் சொன்னேன். அவரும் நெகிழ்ந்துட்டார்.
ஷூட்டிங் ஆரம்பிச்சு ரொம்ப நாள்கள் கழிச்சுதான் ரெண்டு பேருக்குமே காம்பினேஷன் சீன்கள் அமைஞ்சது. ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச நாள்கள்ல மகேந்திரன் சார் தன்னோட அனுபவங்களை அவர்கிட்ட பகிர்ந்துக்குவார். நான் இயக்கின வரை அவரோட நடை, பேச்சு எல்லாம் பார்க்கறப்ப எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. ரஜினி சார் மேனரிசம், ஸ்டைல் எல்லாம் இவர்கிட்ட இருந்து ஒட்டிக்கிச்சுன்னு தோணுச்சு.
ஸ்பாட்டுல சார் என்னை புது இயக்குநரா ஒருநாளும் எண்ணினதில்லை. ஒரு சீன்ல அவர்கிட்ட பதினைஞ்சு டேக் கேட்டிருப்பேன். ஒருமுறை கூட அவர் முகம் சுளிச்சதில்ல. ‘உங்களுக்குச் சரியா வர்றவரை நான் பண்றேன். முழு ஒத்துழைப்பு தர்றேன் முகில். ஒரு இயக்குநர் நினைக்கற விஷயத்தைக் கொண்டு வரணும்னா ஒரு நடிகர் நூறு சதவிகிதம் அவர் நினைக்கற நடிப்பைக் கொடுக்கணும்’ன்னு சொல்லி நடிச்சார். அதேபோல கரெக்ட் டைம்ல வருவார். படப்பிடிப்பில் அவர் சிகரெட் புகைக்கறப்ப, இயக்குநர் முன்னாடி புகைக்கத் தயங்குவார். நான் புது இயக்குநர்தான். ஆனாலும் இயக்குநர் ஸ்தானத்துக்கு அவ்ளோ மரியாதைச் செலுத்துவார்.
இன்னொரு முக்கியமான விஷயம். மொத்த படமும் ஷூட் முடிஞ்சது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துட்டு இருந்துச்சு. அந்தச் சமயத்துல மகேந்திரன் சார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குப் போனார். போனதும் அவரை உடனே பெட்ல அட்மிட் பண்ணச் சொல்லியிருந்தாங்க. ஆனா, அவர் அட்மிட் ஆகாமல் எனக்கு போன் பண்ணினார். ‘டப்பிங் எப்போ ப்ளான் பண்ணியிருக்கீங்க?’ன்னு கேட்டார். ‘அடுத்த வாரம் பண்ணலாம்ன்னு இருக்கோம்’ன்னு சொன்னேன். உடனே அவர் ‘நாளைக்கே டப்பிங் எடுத்துக்குறீங்களா?’ன்னு கேட்டார். ‘அவசரம் எதுவுமில்லை சார். பொறுமையா எடுத்துக்கலாம்’ன்னு சொன்னேன். உடனே, ‘இல்லப்பா நாளை எடுத்துடலாம்’ன்னு சொன்னார். உடனே தயாரிப்பாளர்கிட்ட விஷயத்தைச் சொல்லி, மகேந்திரன் சாரையும் வரவழைச்சு முழுப்படத்துக்கும் பேச வச்சிட்டேன்.
இதுக்கு அடுத்த நாளே அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அதற்கு பிறகு அவர் மறைந்தார். மனசு ரொம்பவே கஷ்டமாகிடுச்சு. இந்தச் சம்பவத்தை பிரபுதேவா சார்கிட்டேயும் சொல்ல, அவரும் உணர்ச்சிவசப்பட்டார். ‘தன்னால யாரும் பாதிக்கப்படக்கூடாது. கமிட் பண்ணின விஷயத்தை முழு ஈடுபாட்டோட முடிச்சிடணும்னு மகேந்திரன் சாரின் அந்த டெடிகேஷனை நாம கத்துக்கணும்’ன்னு சொல்லி நெகிழ்ந்தார். மகேந்திரன் சாரின் இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்புதான்!” – குரல் உடைந்து முடிக்கிறார் முகில்.