கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்பு செய்ததன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ வஜிர அபேவர்தன அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு தேர்தல் ஆணைக்குழு உரிய வர்த்மானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவின் கீழ் மேலே குறிப்பிட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினரொருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானியினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்பு செய்ததால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவினால் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட எழுத்து மூலமான அறிவித்தலுக்கு அமைய, தகுதியான உறுப்பினர் ஒருவரை வெற்றிடத்துக்காக பரிந்துரைக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அக்கட்சியின் செயலாளரினால் வஜிர அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்த வர்த்மானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு தினம் ஒன்றில் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.
எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.