சாதனை செய்வதற்கும் தொழிலதிபராக மாறுவதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை பல உதாரணங்கள் மூலம் நாம் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் மும்பையை சேர்ந்த கோகிலா என்ற பெண் 79 வயதில் தொழில் ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அவரது தொழில் ரகசியம் அவரது அம்மா கற்றுக் கொடுத்தது என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
3 வருடத்தில் முதல் முறையாக நடந்த தரமான சம்பவம்.. ஐடிசி கொடுத்த வாய்ப்பு.. பயன்படுத்திகிட்டீங்களா?
79 வயதில் தொழிலதிபர்
மும்பையைச் சேர்ந்த கோகிலா பரேக், கோவிட்-19 ஊரடங்கின் போது, 79 வயதில் டீ மசாலா வியாபாரத்தை தொடங்கினார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர் வழங்கிய சுவையான தேநீரை பாராட்டி அவரை ஊக்கப்படுத்தினர். அவருடைய டீயின் ரகசியப் பொருள் அவரது தாயால் அவருக்கு கற்று கொடுக்கப்பட்ட மசாலா டீயின் ரெசிபி ஆகும்.
KT சாய் மசாலா
2020 ஆம் ஆண்டில், ஊரடங்கின்போது தன்னுடைய குடும்பத்தின் நிதிநிலையமை கணக்கில் கொண்டு கோகிலா பரேக் தன்னுடைய டீ திறமையை வணிகமாக மாற்ற முடிவு செய்ததார். அவரது அம்மா கற்று கொடுத்த மசாலா டீ பவுடரை அவர் விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார். அவரது மகன் துஷார், மசாலா விற்பனையாளர்களை கண்டுபிடிக்க உதவினார். அவர்களுடைய வணிக நிறுவனத்திற்கு KT (கோகிலா மற்றும் துஷார்) சாய் மசாலா என்று பெயரிட்டனர்.
நோய் எதிர்ப்பு சக்தி
KT சாய் மசாலா குறித்து கோகிலா பரேக் கூறுகையில் தங்கள் தயாரிப்புகள் புதிய மசாலாப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன என்றும், செயற்கை நிறங்கள் இல்லை என்றும், சுவை அதிகரிப்போடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்றும் கூறினார். கொரோனா தொற்று நேரத்தில் கோகிலாவின் மசாலா டீ பவுடரை பயன்படுத்திய டீயை குடித்தால் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் என்ற விஷயம் அவர்களுடைய வணிகத்திற்கு மிகப்பெரிய சாதகமானது.
உறவினர்கள் தந்த ஊக்கம்
ஆன்லைன் போர்ட்டல் ஒன்றிற்கு கோகிலா அளித்த பேட்டியில், ‘எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அவர்கள் கிளம்பும்போது அவர்களுக்கு எனது மசாலா டீ பவுடர் தயாரிப்பை கணிசமான அளவுக்கு கொடுப்பேன். அந்த மசாலா டீ பவுடர் முடிந்தவுடன், இன்னும் கொஞ்சம் தயாரிக்க சொல்லி அதற்கு பணமும் கொடுப்பார்கள். தேநீர் சுவையாக இருப்பதாகவும், அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறியதுதான் என்னை இந்த தொழிலை தொடங்குவதற்கான எண்ணத்தை வழிவகுத்தது என்று கூறினார்.
பொழுதுபோக்கு
ஊரடங்கிற்கு முன் கோகிலா பரேக், சமைப்பது, வீட்டில் பணிகளை செய்வது, குழந்தைகளை கண்காணிப்பது, மருமகளுடன் நேரத்தை செலவிடுவது, கோவில்களுக்கு செல்வது, மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் சுற்றுவது என்பதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். ஆனால் ஊரடங்கு அவருடைய வாழ்க்கை முறையை மாற்றியது. அவரால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. அப்போதுதான் சொந்த பிராண்ட் தொடங்கும் எண்ணம் வந்தது. பல ஆண்டுகளாக தனது சாய் மசாலா பொடிக்கான தேவையைப் பார்த்து, அதை வியாபாரமாக மாற்ற முடிவு செய்தார்.
500 கிலோ
தற்போது, KT சாய் மசாலா ஒரு நாளைக்கு 500 கிலோ ஆர்டர்களை தற்போது பெறுகிறது என பேட்டி ஒன்றில் கோகிலா தெரிவித்துள்ளார். அவருக்கு தற்போது பல தொழில் நிறுவனங்களிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைக்கிறது. ஊடகங்களின் பல செய்தி கட்டுரைகளில் அவரது பெயர் இடம்பெற்றது.
குடும்பத்திற்காக 60 ஆண்டுகள்
பெண்கள் இல்லத்தரசிகளாக மட்டுமே இருக்க முடியும் என்ற எண்ணத்துடன் தான் நான் வளர்ந்தேன். எனக்கு 21 வயதில் திருமணம் ஆகி எனது குடும்பத்தை சுமார் 60 ஆண்டுகள் கவனித்து கொள்வதிலேயே செலவிட்டேன். ஆனால் இப்போது, 80 வயதில் ஒரு தொழிலை நடத்தி வருகிறேன், இது ஒரு சிறந்த வாழ்க்கை என எண்ணுகிறேன் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Mumbai woman who started a business at 79, Uses Secret Recipe
Mumbai woman who started a business at 79 Uses Secret Recipe | 79 வயதில் தொழிலதிபரான பெண்.. அவருடைய வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா?