2022-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டி பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற இருக்கிறது. இந்தியாவிலிருந்து இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன், பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னதாகவே, தான் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
லவ்லினா அவரது ட்விட்டர் பதிவில், “நான் நிறையத் துன்புறுத்தலை அனுபவித்து வருகிறேன்” என்று மிகவும் வருத்தத்துடன் கூறியிருக்கிறார். “ஒலிம்பிக் போட்டியில் நான் பதக்கம் வெல்ல உதவிய எனது பயிற்சியாளர்கள் ஒவ்வொரு முறையும் எனது பயிற்சி மற்றும் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றனர்.
இப்படி எனது பயிற்சியாளர்களில் ஒருவரான சந்தியா குருங் ஜி துரோணாச்சார்யா விருது பெற்றவர். தற்பொழுது காமன்வெல்த் போட்டியில் சந்தியா குருங் ஜி உடனான எனது பயிற்சி எட்டு நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இது எனது பயிற்சிக்கு இடையூறு விளைவிப்பதோடு மட்டுமின்றி, பல துன்பங்களுக்கும் மனரீதியான துன்புறுத்தலுக்கும் என்னை உள்ளாக்குகிறது. இது போன்ற செயல்களால் எனது போட்டிகளில் நான் எப்படிக் கவனம் செலுத்துவது என்று எனக்குப் புரியவில்லை. இந்த நிலை கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் எனது ஆட்டத்தைப் பாழாக்கியது. இதுபோன்ற அரசியலை முறியடித்து நாட்டுக்காகப் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். ஜெய் ஹிந்த்!” என்று அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
லவ்லினா ட்விட்டரில் இப்பதிவை போட்டபிறகு, இந்தியக் குத்துச்சண்டை கூட்டமைப்பின் செயலாளர் ஹேமந்தா கலிதா, “இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் (SAI) இது தொடர்பாகக் கோரிக்கை வைத்துள்ளோம். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் (IOA) கோரிக்கை வைத்திருக்கிறது. இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் அளித்தால் நாங்கள் லவ்லினாவுக்கு சந்தியா குருங் ஜியை மீண்டும் பயிற்சியாளராக அனுமதிப்போம்” என்று கூறியிருக்கிறார்.