Europe Heat Wave: உருகும் தண்டவாளங்கள்; பற்றி எரியும் காடுகள்; எதிர்காலத்துக்கான எச்சரிக்கையா?

சில நாட்களுக்கு முன்னால், சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனத்தின் சீட்டிலேயே ஒருவர் தோசை சுடுவது போன்ற காணொளி ஒன்று வைரலானது நினைவிருக்கலாம்.

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் கோடைக்காலத்தின் தீவிரம் அதிகமாகவோ குறைவாகவோ மாறிக்கொண்டேயிருக்கும். ஓரளவு அதை சமாளிக்கவும் நம்மிடம் அனுபவமும் முன் தயாரிப்பும் உண்டு. ஆனால் நாமே சிலநேரம் வெப்பம் தாளாமல் தவித்துவிடுகிறோம். இப்போதோ அதே வெப்பம் குளிரும் மழையும் நிறைந்த நாடுகளிலும் வரத்தொடங்கியிருக்கிறது.

நமக்கெல்லாம் கோடை என்பது மலைப்பிரதேசங்களை நோக்கி சுற்றுலா கிளம்புவதற்கான காலகட்டம் என்றால், மேலை நாட்டவர்கள் கோடை காலத்தில்தான் முழுக்க முழுக்க வெளியிலேயே சுற்றுவார்கள். ஏரிகளின் அருகில் உள்ள புல்வெளிகளில் பிக்னிக் செல்வது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது, தொப்பிகளும் பூப்போட்ட உடைகளும் அணிந்துகொள்வது என அவர்கள் கோடையை அணுகும் விதமே கொண்டாட்டமானது. ஏனென்றால் அங்கு குளிர்காலங்கள் கடுமையானவை. மனிதர்கள் சுதந்திரமாக வெளியில் உலாவுவதற்கு ஏற்றவை கோடைகாலமும் வசந்தகாலமும்தான்.

அந்த மரபை இப்போது புரட்டிப்போட்டிருக்கிறது காலநிலை மாற்றம். கொஞ்சநஞ்ச சூடு அல்ல, உண்மையிலேயே அந்த நாடுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தெர்மாமீட்டர்களையும் வெடிக்கச் செய்யும் வெப்பம்.

வெப்ப அலைகள்

இங்கிலாந்தில் பல இடங்களில் ரயில்வே சிக்னல்களும் தண்டவாளங்களும் உருகி உருக்குலைந்து போயிருப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. லூடன் விமான நிலையத்தில் வெப்பம் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன, அங்கு விமான சேவையிலும் சிக்கல் வந்திருக்கிறது. இத்தாலியிலும் கிரேக்கத்திலும் பற்றியெரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றிருக்கிறார்கள். இதுவரை ஐரோப்பாவில் மட்டும் இந்த வெப்ப அலைகளாலும் காட்டுத்தீ நிகழ்வுகளாலும் 1500 பேர் இறந்திருக்கிறார்கள்! ஐரோப்பாவில் மொத்தமாக பல லட்சம் பேர் இதனால் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.

“வழக்கமாக இதுபோன்ற வெப்ப அலைகளோ காட்டுத்தீ நிகழ்வுகளோ அவ்வப்போதுதான் வரும். இப்போது இவை மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் வருகின்றன. அதோடு, இந்த நிகழ்வுகளின் தீவிரத்தன்மையும் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது” என்கிறார்கள் காலநிலை வல்லுநர்கள்.

கடந்த புதனன்று (ஜூலை 20, 2022) இங்கிலாந்தில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது. இங்கிலாந்து வெப்பநிலை ஆவணங்களில் இதுவரை இல்லாத உச்சம் இது. 40 டிகிரி செல்சியஸ் என்பது நமக்கு பெரிய அளவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் கோடை காலத்தில்கூட அதிகபட்சம் 23 அல்லது 30 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் நிலவுகிற ஒரு நாட்டில் நிச்சயம் இது பேரிடர்தான். “திருச்சிராப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்” என்ற செய்தி வந்தால் எப்படி இருக்கும்?! அதுபோன்ற ஒரு விநோதம் இது. அந்த மக்கள் குளிருக்கும் மென் வெப்பத்துக்கும் பழகியவர்கள். அங்கு உள்ள கட்டுமானங்கள் குறிப்பிட்ட பருவநிலையை மட்டுமே முன்வைத்து வடிவமைக்கப்பட்டவை. இந்த வெப்பம் திடீரென்று வந்திருக்கிறது என்பதால் தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் இறந்திருக்கிறார்கள்; பொருட்சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

வெப்ப அலைகள்

காட்டுத்தீ நிகழ்வுகளின் தீவிரத்தன்மை மற்றும் பரவலை காலநிலை மாற்றம் அதிகப்படுத்துகிறது. அதீதமான வெப்பநிலையில், மரங்களில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் அவை எளிதில் தீப்பற்றி எரிகின்றன. காட்டுத்தீ நிகழ்வுகளுக்குப் பல காரணங்கள் உண்டு. ஆனாலும் அவற்றின் எண்ணிக்கை, தீவிரத்தன்மை, பரவல் ஆகியவை அதிகரித்திருப்பதற்கும், காட்டுத்தீ நிகழ்கிற காலகட்டம் ஆண்டுதோறும் அதிகரிப்பதற்கும் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான காரணம். இந்த ஆண்டு ஐரோப்பிய காட்டுத்தீயில் கூடுதல் பரப்பளவில் காடுகள் சேதமாகியிருக்கின்றன. ஜெர்மனியில் மட்டுமே காட்டுத்தீயின் பரவல் வழக்கத்தை விட எட்டு மடங்கு அதிகமாம்!

காலநிலை மாற்றம் என்பது நம்மை ஒன்றும் செய்துவிடாது, அது மூன்றாமுலக நாடுகளுக்கான அச்சுறுத்தல்” என்று தைரியமாக இருந்த மேலை நாடுகளின் அசட்டு நம்பிக்கையையும் இந்த நிகழ்வுகள் குலைத்திருக்கின்றன.”இது எதிர்காலத்துக்கான எச்சரிக்கை” என்று ஏற்கெனவே ஐரோப்பியப் பத்திரிக்கைகள் எழுதத் தொடங்கிவிட்டன.

“காலநிலை மாற்றத்தால் வெப்ப அலைகளின் சராசரி எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் அதிகரித்திருக்கிறது” என்கிறார் காலநிலை அறிஞர் ஃபெடரிக் ஆட்டோ. ஜெட் ஸ்ட்ரீம் எனப்படும் ஒருவகை காற்றோட்டம் காரணமாக வெப்ப அலைகள் அதிகரிக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால், “ஜெட் ஸ்ட்ரீம் என்பது வடக்கு மற்றும் தெற்கு பூமிக்கோளங்களின் வெப்பநிலை வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. வடதுருவத்தில் உள்ள நிரந்தரப் பனியே காலநிலை மாற்றத்தால் உருகிவிட்டது, அது வெப்பநிலை வேறுபாட்டையும் பாதிக்காதா என்ன? எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்” என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“காலநிலை மாற்றம் கொல்கிறது. மனிதர்களை, வாழிடங்களை, சூழலை, பல்லுயிர்ப் பெருக்கத்தை… இதுமட்டுமல்ல. ஒரு சமூகம் அணுக்கமாக வைத்திருக்கும் சிலவற்றையும் அது கொல்கிறது – வீடுகள், வணிக அமைப்புகள், கால்நடைகள்….எல்லாவற்றையும்” என்று பேசியிருக்கிறார் ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்.

காட்டுத்தீ

காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட ஒருவர், ஆங்காங்கே தீப்பிடித்து எரியும் உடைகளோடு தப்பி ஓடிவரும் காட்சி ஒன்று மேலை நாட்டு சமூக ஊடகங்களில் வைரலானது. அவர் மருத்துவமனையில் நலமாக இருக்கிறார் என்ற செய்தி அனைவருக்கும் ஆசுவாசத்தைக் கொடுத்தாலும், இதுபோன்ற வெப்ப அலைகளும் காட்டுத்தீ நிகழ்வுகளும் கொண்ட பேரிடர்க் காலமே புதிய இயல்புநிலையாக மாறிவிடுமா என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழுந்திருக்கிறது.

சர்வதேசத் தொலைக்காட்சிகளில் இந்த காட்டுத்தீ பற்றிய காணொளிகளுக்குக் கீழே பல்வேறு நாடுகளில் புதிய நிலக்கரி சுரங்கங்களும் எண்ணெய்க் கிணறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியிருப்பது பற்றிய செய்திகளும் ஸ்க்ரோலில் ஓடுகின்றன. அது மட்டும் மாறவேயில்லை. நோயை குணமாக்காமல் அறிகுறிகளுக்கு மருந்து தேடிக்கொண்டிருக்கிறோம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.