IND vs WI : ‘நானும் ஆல்ரவுண்டர்தான்’ அக்ஷர் காட்டிய அதிரடி; தொடரை வென்ற இந்தியா!

100-வது ஓவரின் கடைசி பந்து வரை வெற்றி தீர்மானிக்கப்படாமல் த்ரில்லிங்காக முடிந்தது இந்திய மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டி. இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த இரண்டாவது போட்டியும் ஆட்டத்தின் கடைசி ஓவர் சென்று அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

தன் பேட்டிங் திறனுக்கு போதிய வெளி இல்லாமல் தவித்து வந்த ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் தான் யார் என்பதை இவ்வுலகிற்கு நிரூபித்தார். முதல் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 600 ரன்களுக்கு மேல் குவிக்க நேற்றையும் ஆட்டமும் அவ்வாறே அமையும் என எதிர்பார்க்க நினைத்தது அப்படியே நடந்தது.

Ind vs WI

டாஸ் வென்ற மேற்கிந்திய அணி முதலில் பேட் செய்தது. ஷாய் ஹோப் தன் 100-வது ஒருநாள் போட்டியில் களம் கண்டார். ஹோப் – மேயர்ஸ் இணை அதிரடி தொடக்கத்தை தந்தனர். இந்நிலையில் இன்னிங்ஸின் 10-வது ஓவரில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹூடாவிடம் வீழ்ந்தார் மேயர்ஸ். பின்னர் புரூக்ஸ் ஹோப் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பார்ட்னர்ஷிப் 60-ஆக இருக்கையில் புரூக்ஸ் ஆட்டமிழக்க அடுத்த பேட்டராக களமிறங்கினார் கிங். கடந்த போட்டியில் அரைசதம் கடந்திருந்த அவர் நேற்றைய ஆட்டத்திலும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார் கிங். கடந்த 17 போட்டிகளில் ஓப்பனிங் முதல் நம்பர் 5 வரை பல இடங்களில் களமிறங்கினாலும் எந்தவொரு தாக்கத்தையும் இதுவரை கிங் ஏற்படுத்தவில்லை.

சாம்சன் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருப்பார் ” பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்றில்லை. தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கான இன்னிங்ஸை ஆடினால் கூட போதும்! ” தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் இன்னிங்ஸ்கள் கிங் கிடம் இருந்து வெளிப்படவில்லை என்பது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய தலைவலி தான். ஜோஷ்வா டா சில்வா, சேஸ் போன்ற வீரர்கள் வெளியே காத்திருப்பதால் கிங் விரைவில் ஃபார்மிற்கு திரும்ப வேண்டும். பின்னர் கேப்டன் பூரன்-ஷாய் ஹோப் இணை ஆட்டத்தை முன்னகர்த்தி சென்றது. பூரன் சிக்சர்களாக விளாசி தள்ளினார். 6 சிக்சர், ஒரு பவுண்டரி என 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அவர். இந்த இணை 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. பூரன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் சிக்சர் அடித்து தன் சதத்தை நிறைவு செய்தார் ஹோப். டாஸின் போது ஷாய் ஹோப் பற்றி கேட்ட கேள்விக்கு “அவர் ரன்கள் அடித்தால் நல்லது. இல்லையென்றால் அதனை செய்ய மற்ற பேட்ஸ்மேன்கள் நாங்கள் உள்ளோம்! ” எனப் பதிலளித்தார்.

Ind vs WI

தன் 100-வது போட்டியில் சதமடித்து தன் கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றிய ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடிக்கும் இரண்டாவது சதம் இது. அவரின் மற்ற 11 ஒருநாள் சதங்களையும் வெளிநாடுகளில் அடிக்கப்பட்டவையே. இறுதியில் 311 ரன்களை எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. 312 என்ற இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய இந்திய அணியின் தொடக்கம் கடந்த போட்டியைப்போல அமையவில்லை. தவன் ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் ஆட 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர். நேரம் தாக்குப்பிடித்த கில் 43 ரன்களில் மேயர்ஸ் பந்தில் வெளியேற அடுத்த வந்த சூர்ய குமாரையும் போல்டாக்கி வெளியேற்றினார் மேயர்ஸ். பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் – சாம்சன் இணை பொறுப்புடன் விளையாட தொடங்கியது.

சாம்சன் தன் ‘Classy drives’ -ஐ ஸ்பின்னர்களை டார்கெட் செய்து அடித்து ஆடினார். ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க ஓடிஐ போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் சாம்சன். ஆனால் எதிர்பாராதவிதமாக ரன்-அவுட் முறையில் தன் விக்கெட்டை இழந்தார் சாம்சன். அப்போது இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின்னர் களமிறங்கிய அக்சர் படேல் அதிரடியாக ஆடத்தொடங்க ஹூடா-அக்ஷர் ஜோடி 5 ஓவர்களில் 50 ரன்கள் அடித்தது. 46 ஓவரில் இரண்டு நோ-பால் உட்பட 16 ரன்கள் அடித்தனர். 47-வது ஓவரில் 3 பவுண்டரிகள் என 27 பந்துகளில் அரைசதம் அடித்தார் அக்ஷர் படேல். இறுதி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட சிக்சர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் அக்சர் படேல். ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் குறிப்பிடும்படியான பேட்டிங்கை ஆடியுள்ள அக்ஷர் சர்வதேச அரங்கில் அதுபோன்ற ஆட்டம் ஒன்றை இதுவரை ஆடவில்லை என்ற குறையை நேற்று போக்கினார். 2014-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அக்சர் படேல் இதுவரை பேட்டிங்கில் பெரிதளவு அடித்ததில்லை. ஆனால், அவரின் நேற்றைய இன்னிங்க்ஸ் அக்ஷர் படேல் கரியின் முக்கிய தினமாக நிச்சயம் இருக்கும். நேற்றைய ஆட்டத்தையும் இந்திய அணியே வென்றிருந்தாலும் மேற்கிந்திய அணியும் நல்லதொரு ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகின்றனர்.

முதல் போட்டியைப் போலவே இப்போட்டியிலும் ‘நோ பால்’ வீசினார் ஷர்துல் தாகூர். ‘நோ பால்’ மூலம் இந்திய அணி கடந்த காலங்களில் அடைந்த தோல்விகள் மறக்க முடியாதவை. ஷர்துல் தாக்குர் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் முக்கியமான விக்கெட்டுகளை வழக்கம் போல இந்த போட்டியிலும் கைப்பற்றினார். தொடரை வென்றுவிட்டதால் அடுத்த போட்டியில் அர்ஷ்தீப் சிங், ருதுராஜ் போன்றோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.