2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது கடந்த ஜூலை 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனத்திற்கான விருதைப் பெற்றது ‘மண்டேலா’ திரைப்படம்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க, இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான படம்தான் ‘மண்டேலா’.
‘ஓட்டுக்குப் பணம்’ என்று அரசியலில் நடக்கும் உண்மையை உணர்த்திய இப்படம், இரண்டு கிராமங்களைக் காட்சிபடுத்தி இருந்தாலும் அரசியலில் இருக்கும் சாதி, பணம், வாக்கினுடைய மதிப்பை மறந்த மக்கள் என நிஜ வாழ்க்கையிலுள்ள அனைத்து யதார்த்தங்களையும் பிரதிபலிக்கிறது.
இப்படி ஆதிக்கத்தின் எதிர்க்குரலாக இயக்குநர் மடோன் அஸ்வின் எழுதிய படத்தின் வசனங்கள் மற்றும் டார்க் காமெடி என்று சொல்லப்படுகிற நகைச்சுவைத் தன்மை பலரையும் ஈர்த்தன. அந்த ‘மண்டேலா’ படத்திலிருந்து சில வசனங்கள் இதோ!
“பொதுனா எல்லாருக்கும் பொதுதானடே!” – ஒரு கழிப்பறைக்காக இரு ஊர் மக்களும் அடித்துக் கொள்ளும் பொழுது வரும் இந்த வசனம் மக்களுடைய சாதிப் பிரிவினையைச் சுட்டிக்காட்டுகிறது.
“நீ ஜெயிச்சா என்ன செய்வ?”, “நான் பதவிக்கு வந்தா ஊர் மக்கள் எல்லா அக்கவுன்ட்டுலையும் 12 ஆயிரம் பணம் போடுவேன்” – இது மாதிரியான வசனங்கள் மூலம் நடைமுறை அரசியலை உணர்த்தியிருக்கிறார் மடோன் அஸ்வின்.
“உனக்கு ஆதார், வோட்டர் ஐடி, எந்த அடையாள அட்டையும் இல்லையா… அப்புறம் எப்படி உன்னை இந்திய குடிமகன்னு நம்புறது?”
“பின்னே இவன பார்த்த அமெரிக்காக்காரன் மாதிரியா தெரியுது?”
“நெல்சன் மண்டேலாவா அது யாரு?”
“நீ எப்படி உன்னோட அடையாளத்துக்காக போராடுறியோ, அது மாதிரி ஒட்டுமொத்த கறுப்பின மக்களுக்காகப் போரடுனவரு!”
“எதுக்காக போராடுனாறோ தெரியல. ஆனா ஆளு நம்மல மாதிரி சுருட்ட முடியோட கறுப்பா கலையா இருக்காரு!”
“நெல்சன் மண்டேலா மேல் சாதி பெயரா இருக்குமோ… உனக்குப் பிடிச்சிருக்கா?”
“வச்சுக்க அவ்ளோதான்!”
ஓட்டுப் போடுவது பற்றி மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வசனம் – “அடிக்குற வெயில்ல யார் வரிசையில நின்னு ஓட்டுப் போடுறது?!”
“ஓட்டுப் போடத் தெரியல. ஆனா அதை வெச்சு நல்லா சம்பாதிக்க மட்டும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!”
“ஒரு ஓட்டோட மதிப்பு தெரியுமா உனக்கு?”
“காச எல்லாருகிட்டையும் வாங்கிட்டு யாராவது ஒருத்தர்க்கு ஓட்டுப் போட்டா போதும்!” என்ற வசனம் மக்கள் தங்களின் வாக்குரிமையை எவ்வளவு அலட்சியமாகப் பார்க்கிறார்கள் என்கிற நிதர்சனத்தை எடுத்துரைக்கிறது.
“இது உனக்கு கொடுக்குற மரியாதைன்னு நினைச்சிட்டு இருக்கியா? உன் ஒட்டுக்குக் கொடுக்குற மரியாதை. எலெக்ஷன் முடிஞ்சோன உன்னைத் தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க!”
இப்படி இந்தப் படத்தினுடைய யதார்த்த வசனங்கள் நடைமுறை அரசியலையும், ஓட்டுரிமை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது.