இந்தியா சுதந்திரம் பெற்றப் பின்பு அதிகமுறை போரிட்டது பாகிஸ்தானுடன்தான். இதில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது 1999களில் நிகழ்ந்த கார்கில் போர். இந்தப் போரில் இந்தியா பெற்ற வெற்றியை உலகிற்கு உரக்க கூறும் தினம், கார்கில் வெற்றி தினமான ஜூலை 26. கார்கில் போரில் வெற்றி பெற்று இந்த ஆண்டுடன் 23 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் ஒவ்வொரு இந்தியரும் ராணுவ வீரர்களின் தியாகத்தை எண்ணி பெருமையுடன் கண்ணீர் சிந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எப்படி தொடங்கியது?
ஸ்ரீநகரில் இருந்து லே என்ற பகுதிக்கு செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில்தான் கார்கில் அமைந்துள்ளது. 5000 மீட்டர் உயரம் கொண்ட கரடு, முரடான சிகரங்களை கொண்ட பிரம்மாண்டமான கார்கில் பிரதேசத்தில் சாதாரண நாட்களிலேயே கடுமையான குளிர் நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் டிகிரிகளில்தான் இருக்கும். இதனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் வீரர்கள் செப்டம்பர் 15 முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின்படி கார்கில் சிகரங்களிலிருந்து பின்வாங்குவார்கள். ஏப்ரலின் பிற்பகுதியில் மீண்டும் தங்களது வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடங்குவார்கள்.
எச்சரித்த நாடோடி மக்கள்
கார்கில் சிகரத்தின் வழியாகத்தான் இந்திய ராணுவத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். ஆகவே, கார்கிலை ஆக்கிரமித்து ‘லே’ பகுதியை கைப்பற்றி இந்திய ராணுவத்திற்கு பின்னைடவை ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் திட்டம். 1999 ஏப்ரல் மாதம் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர ரோந்து பணிக்கு சென்ற இந்திய வீரர்கள் திரும்பவில்லை. அப்போதுதான் பாகிஸ்தானின் ஊடுருவல் பற்றி நாடோடி மக்கள் மூலமாக தகவல் கிடைத்தது. ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், தீவிரவாதிகளும் இந்தியாவின் கார்கில் பகுதியில் ஊடுருவி அறிவிக்கப்படாத போரை தொடங்கிவிட, நாடோடி மக்கள் எச்சரித்ததை அடுத்து இந்திய ராணுவம் கிளர்ந்தெழுந்தது.
ஆபரேஷன் விஜய்
பாகிஸ்தான் துருப்புகளை விரட்டியடிக்க ஆபரேஷன் விஜய் போர்த் திட்டத்தை தொடங்கியது இந்தியா. ‘ஆபரேஷன் விஜய்’ கீழ் இந்திய ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது. அதேநேரத்தில் வான்வழித் தாக்குதலையும் தொடங்கியது இந்தியா. கடுமையான குளிர்மிக்க மலைப்பிரதேச பகுதியில் மன உறுதியுடன் பல இயற்கை தடைகளை எதிர்த்து போர்முனையில் நின்றனர் ராணுவ வீரர்கள். கார்கில் போரில், இந்திய விமானப்படை மிக்-21, மிக்-27, எம்.ஐ-17 ஆகிய மூன்று போர் விமானங்களை இழந்தாலும் இழப்புகளை தாங்கிக்கொண்ட இந்திய ராணுவம் போரை தீவிரப்படுத்தியது.
தீவிரமான தாக்குதல்
1999 ஜூன் 9ஆம் தேதி படாலிக் பகுதியில் இரண்டு முக்கிய நிலைகளை கைப்பற்றி இந்திய ராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது. பதினோரு மணி நேரத் தாக்குதலுக்கு கற்பனைக்கு எட்டாத மன உறுதியும், உடல் உறுதியும் தேவைப்படும். அப்படிப்பட்ட கடும் தாக்குதலுக்குப் பிறகு டைகர் ஹில் பகுதியை மீட்டது. அதே நேரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்க, வேறு வழியின்றி பாகிஸ்தான், பின்வாங்கத் துவங்கியது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார். தொடர்ந்து தனது நிலைகளில் முன்னேறிய இந்திய ராணுவம், பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் மலைப்பகுதியை ஜூலை 26ல் மீட்டு வெற்றிக்கொடி நாட்டியது.
‘ஆபரேஷன் விஜய்’ நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் தேதியில் கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாக கார்கில் விஜய் திவாஸ் நினைவு தினம் இந்தியாவால் அனுசரிக்கப்படுகிறது. இந்தப் போரில் இந்திய ராணுவ வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM