இங்கிலாந்து பிரதமர் தேர்தல்: ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அனல் பறந்த வாக்குவாதம்!

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.

புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் ஆரம்பம் முதலே அதிக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் – லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று ஆதரவு கோரினர்.

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் நேற்றிரவு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர்.

எனினும் உக்ரைன் துறைமுகங்களின் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்களை பாதுகாக்க இங்கிலாந்து கடற்படை அனுப்பப்படுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இருவரும் அனுப்பப்படாது என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். உக்ரைனுக்கு ஆதரவாக பொருளாதார உதவி போன்றவற்றை இங்கிலாந்து தொடர்ந்து செய்யும் என்று ரிஷி சுனக் கூறினார். அதேபோல இங்கிலாந்து அந்த போரில் நேரடியாக தலையிடாது என்று லிஸ் டிரஸ் தெரிவித்தார்.

ரிஷி சுனக் மீது சொத்து குவிப்பு, அவரது ஆடை அலங்காரம் உள்ளிட்டவை பற்றிய குற்றச்சாட்டுகளும், லிஸ் டிரஸ் மீது பொருளாதார விவாகரங்களில் டிரஸ்க்கு போதிய அறிவு இல்லை என்ற குற்றச்சாட்டும் இருதரப்பும் மாறிமாறி ஒருவரையொருவர் குறை கூறினர்.

இதனால் இந்த நிகழ்ச்சி சூடான விவாதமாக மாறியது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், அவர்கள் இருவரும் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் அகதிகள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். சட்ட விரோதமாக தங்கி இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் ருவாண்டா நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். செப்டம்பர் 5-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார். வெற்றியாளர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.