கனரக வாகனங்களை இயக்கும் பேரார்வம் காரணமாக, கேரளாவில் 21 வயது சட்டக்கல்லூரி மாணவி தனியார் பேருந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொச்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பி.ஜி.அன்சாலன் மற்றும் பாலக்காடு மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்மிதி ஜார்ஜ் தம்பதியின் மகள் ஆன் மேரி அன்சாலன். 21 வயதான இவர், எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில், நான்காம் ஆண்டு பயின்று வருகிறார். சிறுவயது முதலே அதிக எடையுள்ள கனரக வாகனங்களை இயக்கும் ஆர்வம் கொண்ட இந்த மாணவி, தனது 15-வது வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்போது, தந்தையின் ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டப் பழகியுள்ளார். எனினும் ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது வரை காத்திருந்த மாணவி ஆன் மேரி, அதன்பிறகு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன உரிமம் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது பக்கத்து வீட்டு நபரும், பேருந்து ஓட்டுநருமான சரத் என்பவர் கொடுத்த பயிற்சி மற்றும் உத்வேகத்தால் விரைவிலேயே பேருந்தை லாவகமாக ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளார் மாணவி ஆன் மேரி. தனது பெற்றோர், பாட்டி மேரியம்மா ஆகியோர் கொடுத்த உற்சாகத்தால், தற்போது ஞாயிற்றுக்கிழமை தோறும், ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல், ‘ஹே டே’ என்ற தனியார் பேருந்தை இயக்கி வருகிறார்.
பெண், அதுவும் இளம் வயது மாணவி பேருந்தை இயக்கியதால் முதலில் பயந்த பயணிகள், ஆன் மேரியின் திறமையை கண்டு பாராட்டி, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காக்காநாடுலிருந்து பெரும்படப்பு வரை செல்லும் இந்தப் பேருந்தை இயக்கும்போது முதலில் மற்ற பேருந்து ஓட்டுநர்களால் சங்கடங்களை அனுபவித்ததாகவும் மாணவி கூறியுள்ளார்.
பெண் ஒருவர் தங்களது பேருந்தை முந்தி செல்லுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில பேருந்து ஓட்டுநர்கள் சேஸ் செய்து வந்ததுடன், மோசமாகவும் திட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் மாணவி ஆன் மேரி. ஆனால் தொடர்ச்சியாக அதே பாதையில் சென்று வருவதால், நாளடைவில் ஏற்பட்ட பழக்கத்தால் அவ்வாறு பேசிய ஓட்டுநர்களில் பலர் தம்முடன் தற்போது நட்பு பாராட்டி வருவதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும் தனது 22-வது பிறந்தநாளுக்குள் ஜேசிபி, கண்டெய்னர் போன்ற வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசையால், அதற்காக பயிற்சி எடுத்துவருகிறார். தனது படிப்பு பாதிக்காதவகையில் அதிக எடை கொண்ட வாகனங்களை இயக்க தொடர் பயிற்சி எடுத்து வரும் மாணவி ஆன் மேரி, கனவுகளை அடைய ஆண், பெண் என்ற பேதம் இருக்கக்கூடானு என்றும், தனது தாயாரைப்போல் நீதிபதி ஆவதுதான் லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM