காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனவே இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினர் நம் நாட்டுக்கு திரும்பலாம் என தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தலிபான்கள் கடந்த சில நாட்களாக இந்து, சீக்கிய அமைப்புகளிடம் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், “பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய இந்துக்களும், சீக்கியர்களும் நாடு திரும்பலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் சீராகிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் காபூலிலிருந்த குருத்வாரா பிரிவினைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. இது அங்கிருந்து சீக்கியர்களிடம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
மேலும், கடந்த ஆண்டு அக்டோபரில், காபூலின் கார்ட்-இ-பர்வான் மாவட்டத்தில் உள்ள குருத்வாராவில் 15 முதல் 20 பயங்கரவாதிகள் நுழைந்து காவலர்களை கட்டிப்போட்டு சேதப்படுத்தினர்.
மார்ச் 2020 ஆம் ஆண்டு, காபூலின் ஷார்ட் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு ஹர் ராய் சாஹிப் குருத்வாராவில் ஒரு கொடிய தாக்குதல் நடந்தப்பட்டது. இதில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இதற்கிடையில், பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த காபூலில் உள்ள குருத்வாரா கர்தே பர்வானை புதுப்பிக்க தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழலில் தலிபான்கள் சீக்கியர்கள், இந்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்துள்ளனர்.