புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கிய நிலையில், அக்னிபாதை திட்டம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக நாடாளுமன்றம் முடங்கியது.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் மக்களவை தொடங்கியது முதலே பதாகைகளுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சபாநாயகரின் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகிய 4 பேரும் மழைக்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இதைப் போலவே மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.