மதுரை: ஏர்வாடி தர்ஹாவில் சிகிச்சை பெற்ற கேரள மனநோயாளி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், தஞ்சாவூர் மனநோயாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைபூண்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் மனநல பாதிப்பக்காக 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதே தர்ஹாவில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நாசர் என்ற அப்துல் நாசரும் மனநல சிகிச்சைக்காக தங்கியிருந்தார்.
தர்ஹாவில் கடந்த 2.9.2015-ல் பாலமுருகனுக்கும், நாசருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாசர் மலையாளத்தில் பாலமுருகனிடம், மலையாளத்தில் சாயா வேண்டும் என கேட்டபடி இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் அங்கிருந்த பனை மட்டையை எடுத்து நாசரை தாக்கியுள்ளார். இதில் நாசர் இறந்தார். பாலமுருகனை ஏர்வாடி தர்ஹா போலீஸார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் பாலமுருகனுக்கு ரூ.10,100 அபராதம் விதித்து, அதில் ரூ.10 ஆயிரத்தை இறந்த நாசரின் குடும்பத்துக்கும், ரூ.100-ஐ அரசுக்கும் வழங்கவும், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் ராமநாதபுரம் நீதிமன்றம் 15.12.2017-ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவு: ”மனுதாரர் 2 ஆண்டுகளாகவே மனநல பாதிப்பில் இருந்துள்ளார். அவருக்கும் நாசருக்கும் முன்விரோதம் இருந்ததில்லை. மனுதாரர் திட்டமிட்டு நாசரை கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. இதனால் கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
அவரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்க உத்தரவிட முடியாது. மனுதாரரின் தந்தை அவரை பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தால் அவருடன் அனுப்பலாம். அதற்காக மனுதாரரின் தந்தை கீழ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதில் திருப்தியடையும் நிலையில் கீழமை நீதிமன்றம் மனுதாரரை தந்தையிடம் ஒப்படைக்கலாம்.
முன்னதாக, மனுதாரரின் நிலை குறித்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அறிக்கை பெற வேண்டும். அதன் அடிப்படையில் மனுதாரருக்கு தொடர் சிகிச்சை தேவை என கருதினால், தண்டனை கைதியாக இல்லாமல், உள் நோயாளியாக சிகிச்சை அளிக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிடலாம். இந்த வழக்கில் மனுதாரருக்காக ஆஜரான சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் சாமிதுரையின் பணி பாராட்டுக்குரியது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.