வேட்டையாடுதல், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 329 புலிகளை இந்தியா இழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தரவுகளின்படி 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும், 2021-ல் 127 புலிகளும் என மொத்தம் 329 புலிகளை இழந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதில் 68 புலிகள் இயற்கையான காரணங்களாலும், 5 இயற்கைக்கு மாறான காரணங்களாலும், 29 வேட்டையாடியதாலும், 30 ‘சிறை பிடிப்பு’ காரணமாகவும், 197 புலிகள் சரியான கண்காணிப்பு இல்லாததாலும் இறந்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.
மனிதர்கள் மீதான புலியின் தாக்குதல் 125 ஆக அதிகரித்துள்ளது. அதில் மகாராஷ்டிராவில் 61 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 25 பேரும் புலிகளின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். வேட்டையாடுதல் வழக்குகளின் எண்ணிக்கை 2017லிருந்து 2021 வரை, நான்கு மடங்காகக் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். புலிகளைப் பற்றிய தகவல்களைப் பேசிய பின்பு யானைகளின் இறப்பு குறித்தும் பேசியுள்ளார். அதில் வேட்டையாடுதல், மின்கசிவு, விஷம் மற்றும் ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 307 யானைகள் இறந்துள்ளன என்றும், அதில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 222 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.