சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக அமைக்கப்படவுள்ளதால் அதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.
தென்கிழக்கு ஆசிய பகுதியில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் வகையில், சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தையும் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தையும் இணைக்கும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) என்ற திட்டத்தை நிறைவேற்ற சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுகள் முயன்று வருகின்றன. எனினும் இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியாக அமைக்கப்படவுள்ளதால் அதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அதனையும் மீறி இந்த திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து சீனா செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டத்தின் ஆலோசனை கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த வழித்தடத்தில் இணைய விரும்பும் எந்தவொரு சர்வதேச நாட்டையும் பொருளாதார கூட்டணியில் திறந்த மனதுடன் வரவேற்பதாக இருநாட்டு பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் அரிந்தாம் பக்சி, “சீனா பாகிஸ்தான் உடன் இணைய, சில நாடுகள் அதில் பங்கேற்பதாக தகவல்கள் வருகின்றன. இதை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது போன்ற எந்த ஒரு நடவடிக்கை மூலம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பையும் பாதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாகிஸ்தானால் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்திய எல்லை பகுதிகளில் அமைக்கப்படும் இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு இந்தியா தகுந்த முறையில் பதிலடி அளிக்கும்” என்று கூறினார்.
இதையும் படிக்க: அக்ஷய் குமார் நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் நடிகரா? – உண்மை இதுதான்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM