சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்று சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சில நாள் முன்பு கொரோனாவால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். முழு அளவில் உடல் நலன் பெறாவிட்டலும், இடையில் சில நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். கொரோனா காரணமாக எனது தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என பணியாற்றி வருகிறேன். இக்கல்லூரி தொடங்கப்பட்டபோது திமுக அரசு 25 ஏக்கர் நிலத்தை கொடையாக வழங்கியது. கருணாநிதி தொடங்கிய எதுவுமே சோடை போனதாக வரலாறு கிடையாது. இதை இந்த கல்லூரியும் நிரூபித்துள்ளது.
சென்னை மேயராக நான் இரு முறை இருந்தபோது இங்கு பல நிகழ்வில் பங்கேற்றேன். மேயராக இருந்தபோது வேளச்சேரியில் 7 ஆண்டு குடியிருந்தேன். இந்த கல்லூரியில் 7 ஆண்டுகள் நடைபயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். இங்கு கிரிக்கெட், ஷெட்டில் விளையாடி இருக்கிறேன். சீக்கியர்கள் இங்கு சிறுபான்மை என்றாலும், கல்வியில் அவர்கள் ஆற்றியது பெரும்பான்மையை விட மகத்தானது.
அண்மைக்காலமாக நடந்த சில நிகழ்வுகள் எனக்கு மன வேதனை தருகிறது. கல்வி நிறுவனம் நடத்துவோர் அதை தொழில், வர்த்தகமாக இல்லாமல், தொண்டாக நினைக்க வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் மன உறுதி வேண்டும், பட்டம் மட்டும் போதாது, சோதனையை வெல்லும் ஆற்றல் பெற்றோராக மாணவர்கள் இருக்க வேண்டும். தொல்லைகள், அவமானத்தை மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மாணவிகளுக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக இழிசெயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. உறுதியாக நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவிகள் அறிவுக் கூர்மை உடலுறுதி, மன உறுதி கொண்டோராக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை, கனவு. படிப்புடன் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது. எப்போதும் மாணவ மாணவியருடன் இணைந்து, அவர்களை நல்வழி படுத்தும் நோக்கில் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலை நிமிரும் எண்ணமே வேண்டும். உயிரை மாய்க்கும் சிந்தனை கூடாது… உயிர்ப்பிக்கும் சிந்தனைதான் தேவை. `பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா; அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்ற பாரதியாரின் வரிகளை மாணவிகள் நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM