அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களின் பெயரை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் படித்த பிறகு, மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் முன்மொழிந்தார்.
6 திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கத்திலிருந்து தினமும் அமளியால் நாடாளுமன்றம் முடங்கி வரும் நிலையில், மக்களவைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பதாகைகளை ஏந்தி அவை தலைவர் இருக்கையை முற்றுகையிடுவது, தொடர் முழக்கங்கள் எழுப்புவது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டு அவைகளிலும் தங்கள் எதிர்ப்பை தினசரி பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்றும் மாநிலங்களவையில் பலமுறை கோரிக்கை வைத்தும் முழக்கங்கள் தொடர்ந்ததால், 19 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். திமுகவைச் சேர்ந்த எம் சண்முகம், கனிமொழி என் வீ என் சோமு, என் ஆர் இளங்கோ, கிரிராஜன், கல்யாணசுந்தரம் மற்றும் எம் எம் அப்துல்லா இடைநீக்கம் செய்யப்படுவதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். இவர்கள் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.
தொடர் முழக்கங்கள் மற்றும் கடும் அமளிக்கிடையே இடை நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதால் குழப்பம் நிலவியது. அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களின் பெயரை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் படித்த பிறகு, மத்திய இணை அமைச்சர் முரளிதரன் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த மாநிலங்களவை துணைத் தலைவர், திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ரஷிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர்களை கடும் கூச்சலுக்கு இடையே படித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ், மாசும் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், அபிர் ரஞ்சன் பிஸ்வார், சாந்தனு சென், மற்றும் நதிமுல் ஹக் ஆகிய 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விதி எண் 256படி அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த தாமோதர் ராவ், ரவீந்திர வாடிராஜு மற்றும் லிங்கையா யாதவ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரஹீம் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோரும் இடை நீக்கம் செய்யப்பட்டுளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிவதாசனும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநீக்கத்துக்கு பிறகு அவை கூடிய போது, இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது அவை தலைவராக செயல்பட்ட புவனேஸ்வர் களிதா அவர்களை வெளியேறும்படி கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தொடர்ந்ததால் மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் அமைதி திரும்பாததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் நாடாளுமன்ற வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காமல் 19 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என டெல்லியில் திருச்சி சிவா பேட்டியளித்தார். 19 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எதிர்க்கட்சியினருடன் ஆளுங்கட்சியினர் கலந்து பேசுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
– கணபதி சுப்ரமணியம்
இதையும் படிக்க: மது வேண்டாம்; கஞ்சா அடிங்க – பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM