நெல்லையில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்த இடத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசம் மேற்குத்தொடரச்சி மலையில் உள்ள பிரசித்திப்பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10-நாட்களுக்கு முன்பாகவே குடும்பத்தினருடன் வருகை தந்து குடில்கள் அமைத்து தங்கி சாமி தரிசனம் செய்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 30ஆம் தேதி வரை அரசுப் பேருந்துகளில் வர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதன்படி இன்று காலை மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உறவினர்களான சரவணன், விஷ்ணு குமார் ஆகியோர் குடும்பத்துடன் இன்று காலை ரயிலில் நெல்லை வந்து, அங்கிருந்து பேருந்து மூலமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்தனர். அப்போது சரவணன் மகன் கார்த்திக் (வயது 8), விஷ்ணு குமாரின் மகன் ஹரிஷ் குமார் (வயது 10) ஆகிய இரண்டு சிறுவர்களும் கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் மாயமான சிறுவர்கள் இருவரும் ஆற்றில் மிதந்து கொண்டிருந்தனர்.
உடனடியாக சிறுவர்கள் மீட்டு இருவரையும் அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றிய கல்லிடைக்குறிச்சி போலீசார் அம்பை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்த சிறுவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM