மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மராக்கின் பண்ணை வீட்டில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் பிப்ரவரி மாதம் புகார் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.
துராவில் உள்ள தனது பண்ணை வீட்டில் விபச்சார விடுதி நடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த மேகாலயா பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மாராக்கை உத்தரப் பிரதேச போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
முன்னதாக, மேகாலயா காவல்துறை பெர்னார்ட் மராக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டது. அவர் கண்டுபிடிக்கப்பட்டால், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் இரவு 7.15 மணியளவில் மராக் கைது செய்யப்பட்டார். “அவர் ஹபூரில் பயணம் செய்ததாக எங்களுக்கு வட்டாரங்கள் மூலம் தெரிய வந்தது. நாங்கள் ஹபூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தோம். இதையடுத்து அவர் 30 நிமிடங்களில் கைது செய்யப்பட்டார்” என்று துரா பகுதி உள்ள மேற்கு கரோ ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சிங் கூறினார்.
மேகாலயா உள்ளூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மாராக் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் கைது உத்தரவு பிறப்பித்தது.
மராக் தொடர்பான இடத்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்டதைத் தொடந்து, ஜூலை 22 ஆம் தேதி போலீசார் மராக்கின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.
சனிக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், அங்கே 23 பெண்கள் உட்பட 73 இளைஞர்களை கைது செய்ததாகவும் அங்கிருந்து ஐந்து சிறார்களை மீட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
1956 ஆம் ஆண்டு முறையற்ற கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் பெர்னார்ட் மராக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்போதிருந்து, மராக் தனது இடத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று வலியுறுத்தி வருகிறார். முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி) மூலம் தனது புகழைக் கெடுக்க திட்டமிடப்பட்ட சதி நடந்து வருவதாக பாஜக தலைவர் கூறினார். மாநில பா.ஜ.,வும், மராக்கிற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் பாஜகவுக்கும் என்.பி.பி-க்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்கும் என்றா அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. என்.பி.பி மேகாலயாவில் ஆளும் ஜனநாயகக் கூட்டணியில் முன்னணி கட்சியாகும்.
மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னெஸ்ட் மாவ்ரி மற்றொரு அறிக்கையை வெளியிட்டார், துராவில் உள்ள பாஜக காரியகர்த்தாக்களை போலீசார் தேவையில்லாமல் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “எங்கள் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் செயல், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. காவல் துறையின் இந்த நடவடிக்கை அனைத்து மாநில காரியகர்த்தாக்களையும் கோபப்படுத்தியுள்ளது” என்று எர்னெஸ்ட் மாவ்ரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜக மத்திய தலைமைக்கு இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், புதன்கிழமை மாநில கட்சி அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திப்படி, என்.பி.பி தலைவர் துணை முதல்வர் பிரஸ்டோன் டைன்சோங், காவல்துறை சுதந்திரமாக செயல்பட அவரது அரசாங்கம் அனுமதிக்கிறது என்று கூறினார்.
“எந்தக் கட்சியாக இருந்தாலும், அவர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானதுதான். விரும்பத்தகாத விஷயங்கள் நடந்துள்ளன. சட்டம் அதன் அதன் போக்கில் நடவடிக்கை எடுக்க அனுமதிப்போம்” என்று டைன்சாங் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”