சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதிவாளர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர் நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய இடங்கள் கண்டறிந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறும்போது, ”பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் (பொறுப்பு) கோபியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் (ஐசிசி) இன்டர்நல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் நடத்தை அலுவலர், ஒரு பெண் சட்ட வல்லுநர், பெண் காவல் அதிகாரி, இரண்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், இரண்டு பல்கலைக்கழக நிர்வாக பணியாளர்கள், தலா ஒரு மாணவர், மாணவி இதில் அங்கம் வகிக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவிகள், ஐசிசி குழுவின் மூலம் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவினர் முறையாக விசாரணை மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கும்பட்சத்தில், குற்றம்சுமத்தப்பட்டவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, பெரியார் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய இடங்கள் கண்டறிந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேமரா இல்லாத இடங்களில், எந்தெந்த பகுதியில் புதியதாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என ஆய்வுக்கு உட்படுத்தி, கண்காணிப்பை பலப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.