புதுச்சேரி: “புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்கவும், கஞ்சா புழக்கத்தைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி மனோஜ்குமார் லால் உறுதியளித்தார்.
புதுச்சேரி டிஜிபியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த அவர் நேற்று மாலை புதுச்சேரி டிஜிபியாக பதவியேற்றார். அவரை டிஜிபி இருக்கையில் ரன்வீர் சிங் கிருஷ்ணியா அமர வைத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முன்னதாக, அவருக்கு காவல் துறை தலைமையகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து இன்று காலை முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஜிபி மனோஜ்குமார் லால் கூறுகையில், “புதுச்சேரிக்கு பல வரலாறு உள்ளதால் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான முறையில் புதுச்சேரி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆன்மிகம் மற்றும் பல வரலாற்றை புதுச்சேரி கொண்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன்.
தூய்மையான புதுச்சேரிக்கு மக்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். மக்களுக்கு காவல் துறை துணையாக இருக்கும்.
புதுச்சேரியில் ரவுடிகளை ஒடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் தனி கவனம் செலுத்தப்படும். புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா புழக்கத்தைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விவகாரங்களில் முதலில் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.