கடலூர்
பொறாமையே கருணாநிதி பேனா நினைவுச் சின்ன எதிர்ப்புக்குக் காரணம் எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் காங்கிரஸ் கட்சி சத்தியாகிரக போராட்டம் நடத்தியது. இதில் கடலூரில் நடந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம், ”காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக விசாரணைக்கு அழைத்து இருக்கிறார்கள். ஜனநாயக ரீதியாக, சட்டரீதியாக, தார்மீக ரீதியாக இது தவறு என்பது எங்கள் கருத்து.
வங்காள விரிகுடா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ரூ.80 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதில் எந்த தவறும் இல்லை. அவர் தமிழ்ச் சமூகத்தில் மக்களைத் தட்டி எழுப்பிய வலிமையான தலைவர். ஆனால் ரூ.3,000 கோடிக்குச் சிலையை வைத்தவர்கள் இது தவறு என்று குறை சொல்வது பொறாமையில் சொல்லப்படும் கருத்து.” எனக் கூறி உள்ளார்.