மதுரை : குலசாமியான 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன்,போர் வீரன் நடுகற்கள்!

மதுரை மாவட்டம், பேரையூர் அருகில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 600 ஆண்டுகள் பழைமையான குதிரை வீரன் சிற்பம், போர் வீரன் சிற்பம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

நடுகற்கள்

மதுரையைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் தொல்லியல் எச்சங்களையும், தமிழர் நாகரிகத்தின் நீண்டநெடிய வரலாற்று அடையாளங்களையும் கண்டறிந்து வெளிப்படுத்தி வருபவர் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் முனீஸ்வரன். இவருடன் முனைவர் இலட்சுமணமூர்த்தி, ஆதி பெருமாள்சாமி ஆகியோர் இணைந்து பேரையூர் வட்டாரத்தில் கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தனியார் விவசாய நிலத்தில், தனிப்பலகைக் கல்லில் திகழ்ந்த கி.பி 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் மற்றும் போர் வீரன் நடுகற்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறும்போது, “பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்குமான வணிகப் பாதை செல்லும் முக்கியமான ஊர் பேரையூர். இவ்வூர் ஆரம்பத்தில் `கடுங்கோ மங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வூரில் ஆதிகால மனிதனின் வாழ்விடம், பாறை ஓவியம், முதுமக்கள் தாழி, பாண்டியர் கால கல்வெட்டு, நாயக்கர் கால நடுகற்கள் காணப்படுகின்றன.

தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன்

அதன் தொடர்ச்சியாக பேரையூர் மொட்டமலை அருகே தனியார் விவசாய நிலத்தில், தனிப்பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட நடுகற்களைக் கண்டோம். அவற்றில் குதிரை வீரன் நடுகல் 6 அடி உயரம்; 3 அடி அகலத்துடன் திகழ்கிறது. அந்த நடுகல்லில் வீரன் ஒருவன் குதிரையின்மீது அமர்ந்திருப்பது போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாய்ந்து செல்லும் குதிரையும் அதன்மீது அமர்ந்து ஈட்டியை ஓங்கிப் பிடித்துள்ள வீரனும் நம்மைக் கவர்கின்றனர்.

உறுதியான கால், ஒட்டிய வயிறு, விரிந்த மார்பு, காலில் கழல், இடுப்பில் குறுவாள் போன்றன அவன் பெரும் வீரன் என்பதைப் பறைசாற்றுகின்றன. காது அமைப்பும் சிறிய கொண்டையும் அன்றைய நாகரிகத்தை உணர்த்துவதாக உள்ளன.

குதிரை வீரனுக்குப் பின்னே மூன்று பெண்கள் வரிசையாக நிற்கின்றனர். முதலில் நிற்கும் பெண் கையில் செண்டு ஏந்தியிருப்பதால், அவள் அந்த வீரனுக்காக உடன்கட்டை ஏறிய அவனின் மனைவி என்பதை அறிய முடிகிறது.

குதிரை வீரன்,போர் வீரன் நடுகற்கள்

மற்ற இருவரும் பணிப் பெண்கள் என்று அறியமுடிகிறது. நடுவிலுள்ள பெண் அரச சின்னத்தை ஏந்தி நிற்க, கடைசியில் இருப்பவள் ஒரு கையை இடுப்பில் ஊன்றியும் மறு கையால் கவரி வீசியபடியும் நிற்கிறாள். மனைவி மட்டும் பாதம் வரை ஆடை அணிந்திருப்பதும், பணிப்பெண்கள் கால் முட்டி வரை மட்டுமே ஆடை அனிந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். அதேநேரம், மூவருமே மார்பில் கச்சு அணிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

குதிரை வீரன் சிற்பம் அருகிலுள்ள போர்வீரனின் புடைப்புச் சிற்பம் 3 அடி உயரம்; 2 அடி அகலமும் கொண்டுள்ளது. இடுப்பில் குறுவாள் திகழ, வலக்கையால் வாளை உயர்த்தி ஓங்கியபடியும் நீண்ட காதுகள், சற்று சரிந்த கொண்டையுடனும் காட்சி தருகிறான்.

போர் வீரன்

இந்தப் பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த குதிரை வீரன், போர் வீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு சிற்பங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில இன மக்கள் தங்களின் குல தெய்வமாக இந்த நடுகற்களை தற்போதும் வழிபட்டு வருகின்றனர். இந்த நடுகற்கள் ஹொய்சாளர் கலைப்பாணியில் அமைந்துள்ளதால் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருத முடிகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.