புதுடெல்லி: ‘முழு தகுதியும், திறமையும், அனுபவமும் இருந்த போதிலும், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் ஆரம்ப நிலை ஆசிரியர்களாகக் கூட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை’ என நாடாளுமன்ற குழு தனது அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. மக்களவையில் தாழ்த்தப்பட்ட (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) நலன் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் 1111 ஆசிரியர், 275 உதவிப் பேராசிரியர், 92 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படிப்பட்ட சூழலில் கூட, முறையான தகுதி, திறமை மற்றும் அனுபவம் வாய்ந்த எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்கள் ஆரம்ப கட்டமான ஆசிரியர் பணிக்கு கூட போதுமான எண்ணிக்கையில் சேர்க்க அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு பொருத்தமான, போதுமான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருப்பதில்லை என அரசு கூறும் காரணங்களை நிச்சயம் ஏற்பதற்கில்லை.எனவே, தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் முறையான இடஒதுக்கீடு அடிப்பைடயில் அடுத்த 3 மாதங்களுக்கு நிரப்பப்பட வேண்டும். எதிர்காலத்திலும் தற்போதுள்ள அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பிய பிறகு, எஸ்சி, எஸ்டி.க்கு ஒதுக்கப்பட்ட ஒரு ஆசிரியர் இடமும், எந்த சூழலிலும் 6 மாதத்திற்கு மேல் காலியாக இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களின் உரிமையை பறிப்பதற்காக தேர்வுக் குழுவின் தவறான பாரபட்சமான மதிப்பீட்டின் காரணமாக அவர்கள் வேண்டுமென்றே ‘பொருத்தமற்றவர்கள்’ என்று அறிவிக்கப்படுகிறார்கள். அதே போல, எய்ம்ஸ் பொதுக்குழுவில் எஸ்சி, எஸ்டி உறுப்பினர்கள் இல்லை. இது முடிவெடுக்கும் செயல்முறை மற்றும் கொள்கை விஷயங்களில் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான, அவர்களின் நியாயமான உரிமைகளை பறிக்கிறது. அதே போல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகளிலும் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு கொள்கை அமல்படுத்தப்பட வேண்டும். அங்கும் எஸ்சி, எஸ்டி ஆசிரியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.