பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக மூத்தத் தலைவர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து, கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்காலிக பொதுச்செயலாளரக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் இரு தரப்பு ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் மீது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் காவல் நிலையத்தில் திருட்டு புகார் அளித்தார்.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் எடப்பாடி பழனிசாமியின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்திலும் நடந்துவருகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை ஓ.பன்னீர் செல்வமும், பன்னீர் செல்வம் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமியும் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டி நீக்கிவருகின்றனர்.
இந்தக் களோபரங்களுக்கு மத்தியில் அதிமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் கட்சியின் மூத்தத் தலைவருமான தம்பிதுரை இன்று (ஜூலை 26) சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 28ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
தொடர்ந்து, 29ஆம் தேதியும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில்தான் இருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர் எனக் கூறப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் தம்பிதுரையின் சந்திப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இரு தலைவர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு சமாதானம் செய்து வைக்கப்படும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
எனினும் தம்பிதுரை அரசியல் பேசினாரா? அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்தாரா? பிரதமர் நரேந்திர மோடியின் பதில் என்ன? என்பது அடுத்த இரு தினங்களில் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஆர்.பி. உதயகுமார், டெல்லியில் மத்திய பாஜக எங்களை ஆதரிக்கிறார்கள். ஆகவே ஓ.பன்னீர் செல்வம் இனி அரசியல் ஆநாதை என்று கூறினார்.
இந்த ஆர்.பி. உதயகுமாருக்கு ஓ. பன்னீர் செல்வம் வகித்துவந்த பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil’