Businessman Rahul Surana arrested Tamil News: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட், சுரானா பவர் லிமிடெட், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை, ஐ.டி.பி.ஐ., வங்கியிடம் இருந்து, 4,000 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல், முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்டவிரோத பணப்பற்றிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்தது.
ஐடிபிஐ வங்கியில் தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், 1301.76 கோடி ரூபாய் கடனும், சுரானா பவர் லிமிடெட் சார்பில் 1495.76 கோடி ரூபாய் கடனும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1188.56 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாகவும், இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்றும் புகாரில் குறிப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர், சுரானா நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோரை கைது செய்தது. இவர்கள் நான்கு பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு கடந்த 14ம் தேதி ஆஜர்படுத்தபட்டனர். அப்போது, நால்வரையும் நாளை ஜூலை 27 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், சுரானா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், சுரானா பவர் லிமிட்டின் மூத்த துணைத் தலைவருமான தொழிலதிபர் ராகுல் சுரானா 8,045 கோடி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில், அவரது தந்தை தினேஷ் சந்த் சுரானா மற்றும் அவரது மாமா விஜய்ராஜ் சுரானா ஆகியோர் சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சுரானா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் சுரானாவை தீவிர மோசடி விசாரணை பிரிவு (SFIU) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய தங்கம் இறக்குமதி நிறுவனமாகவும், எஃகு வணிகத்தில் வெற்றிகரமான வர்த்தக நிறுவனமாகவும் சுரானா குழுமம் இருந்தது. ஒரு கட்டத்தில், தமிழகத்தில் தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நிறுவனமாக இருந்தது. இதனிடையே, சுரானா குழுமம் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக அதன் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுரானா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் சுரானாவின் ஷெல் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளில் 8,045 கோடிக்கு மேல் கடன் வாங்கி, அவை செலுத்தப்படாமல் உள்ளது என்று புகார் எழுந்தது. இதையடுத்து, ராகுல் சுரானா மீது தீவிர மோசடி விசாரணை பிரிவு (SFIU) அதிகாரிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
ராகுல் சுரானா, ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கடன் வாங்குவதும், பின்னர் திவால் மனுக்களை தாக்கல் செய்வதுமாக இருந்துள்ளார். திவாலான முதல் நிறுவனத்தை வாங்க மற்றொரு ஷெல் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இதேபோல், ஒரு மிகப்பெரிய ஷெல் நிறுவனங்களின் நெட்வொர்க்கையே அவர் உருக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் தனது குழுமத்தில் வேலை செய்யும் ஊழியர்களை அந்த ஷெல் நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவாக நியமித்துள்ளார்.
இப்படியாக தொடர்ந்து வங்கிகளில் கடன் வாங்கிய பணம், கடைசியில் ராகுலின் நிறுவன கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதுள்ளது. இதை உறுதி செய்த தீவிர மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும், பணமோசடி விசாரணையையும் சிபிஐ மற்றும் அமலாக்க துறையினரும் தொடங்கியுள்ளனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil