போபால்: வடமாநிலங்களில் கொட்டி வரும் கனமழையால் சாலைகள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டிருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளன. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், அரியானா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. மந்தி பகுதியில் பெய்த தொடர் மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது. தரைப்பாலங்கள் நீரில் மூழ்கி இருப்பதால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து முடங்கியுள்ளது. கோட்டா பகுதியில் அணையிலிருந்து 1,50,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ஜோத்பூரில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் கார்கள் அடித்து செல்லப்பட்ததால் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் சுற்று பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். ஜம்மு காஷ்மீரில் பெய்த கனமழையால் உஜூ ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் மீட்டனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது. போபாலில் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. குல்லு பகுதியில் நேற்று திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த திடீர் நிலச்சரிவால் பகிப்பூர், ஸ்ரீகந்த் இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம், அசாம், குஜராத் மாநிலங்களில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் இந்த பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. பல ஏக்கரில் சாகுபடி செய்த பயிர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.