முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எழுத்தாற்றலைப் போற்றும்விதமாக, சென்னையின் மெரினா கடலுக்கு நடுவே அவரின் பேனா வடிவ சிலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது.
சுமார் 80 கோடி ரூபாய் செலவில், 134 அடி உயரத்தில் கடலில் அமைக்கப்படும் இந்த பேனா சிலையைச் சென்றடைய கரையிலும், கடலிலும் சேர்த்து சுமார் 650 மீட்டர் தொலைவுக்கு கண்ணாடிப் பாலம் ஒன்றும் அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவற்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறை, CRZ (Coastal Regulation Zone) அனுமதி கேட்டு சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இந்த சிலை விவகாரம், தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ஏற்கெனவே, கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த வளாகத்தின் முகப்பிலேயே பேனா வடிவ பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்னும் இரண்டு மடங்கு தொகையை ஒதுக்கி, கடல் நடுவில், அதுவும் அரசு செலவில் இன்னொரு சிலை கட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது’ என்று பலரும் எழுப்பும் கேள்விகளில் நியாயம் இல்லாமல் இல்லை.
தமிழ்நாடு அரசு கடுமையான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் மொத்தக்கடன் ரூ. 5.7 லட்சம் கோடியாக இருப்பதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2.63 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல கடந்த மார்ச் மாதம் அவர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில், வரும் 2023 மார்ச் மாதத்தில் தமிழகத்தின் நிலுவைக்கடன் ரூ. 6.53 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதுமட்டுமல்லாமல், தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் போனதற்கு கடன்சுமையும் நிதி நெருக்கடியுமே காரணம் என தொடர்ச்சியாகக் கூறி வருகிறது தி.மு.க அரசு. தேர்தல் நேரத்தில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றன.
நிதிப் பற்றாக்குறையால் மின்சார வாரியமும், போக்குவரத்துக் கழகங்களும் தள்ளாடி வருவது அனைவரும் அறிந்த விஷயம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், மக்கள் வரிப்பணம் 80 கோடியை செலவு செய்து, மக்களுக்கு நேரடிப் பயன் தராத நினைவுச்சின்னத்தை எழுப்புவது மக்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும்.
இதுதவிர, சென்னைக் கடற்கரையோர துறைமுகக் கட்டுமானங்களால் ஒருபக்கம் மணல் அரிப்பும், மறுபக்கம் மெரினாவில் மணல் குவியும் போக்கும் அதிகரித்துவருவதாக மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த நிலையில், மெரினாவை ஒட்டிய கடலிலேயே கருணாநிதியின் பேனா சிலை அமைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என எச்சரிக்கை விடுக்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். ஆனால், இந்த சிலை அமைக்கும் விஷயத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. ”இது கருணாநிதிக்கு மக்கள் செய்யும் நன்றிக் கடன். பேனா சிலை குறித்து விமர்சிப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம். அவருக்கு செய்ய வேண்டிய கடமையை தமிழக அரசு கண்டிப்பாகச் செய்யும்” என்று சொல்லியிருக்கிறார் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு.
`சிலைகளில் வாழ்வதில்லை தலைவர்கள், சித்தாந்தங்களில் வாழ்கிறார்கள்’ என்பதை தமிழக முதல்வர் ஸ்டாலின் புரிந்து செயலாற்ற வேண்டும்.