Chess Olympiad 2022 – சென்னையில் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் போட்டிக்காக விளம்பரங்கள் மக்களை வியக்கவைக்கும் வண்ணம் பரப்பப்படுகிறது.
நேப்பியர் பாலத்தை சதுரங்க பலகைப் போல வர்ணம் பூசியதிலிருந்து, இசை ஜாம்பவானான ஏ.ஆர்.ரகுமான் இப்போட்டிக்காக பிரத்யேகமாக பாடல் இசையமைப்பது, சென்னை முழுவதும் ‘தம்பி’ (செஸ் ஒலிம்பியாடின் இலச்சி உருவப்படம்) சிலையாகவும், பதாகையாகவும் விளம்பரப்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களைப் பரப்புவது போன்ற பல்வேறு வகையில் மக்களின் முன் இப்போட்டியை கொண்டு சேர்க்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் விதத்தில், ‘தம்பி’ உருவப்படம் மற்றும் செஸ் போர்டு படங்களை அச்சடித்துள்ளனர்.
இந்த முயற்சி சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னை மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இப்போட்டியை விளம்பரப்படுத்துவதில் ‘இது நம்ம சென்னை நம்ம செஸ்’ என்ற வாசகங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
அவ்வாசகங்களுடனும், செஸ் போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரத்தின் கோபுரங்களும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளம்பரப்படுத்தினால், இப்போட்டியின் தகவலை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்க்கும் உணர்வை கொடுக்கிறது என ஆவின் நிர்வாகம் இந்த முயற்சியை விவரித்துள்ளனர்.