24 ஆண்டு கால கனவு பலிக்குமா! காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் களம்காணும் இந்திய ஆக்கி அணி

புதுடெல்லி,

காமன்வெல்த் போட்டிகளில் முதன் முறையாக 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டியின் போது ஆக்கி சேர்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஆக்கி அணி விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை நடைபெற்ற ஆறு முறையும், ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி நிற்கிறது. காமன்வெல்த் ஆக்கிப் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஆறு முறையும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

ஆனால் சரித்திரத்தை மாற்றி இம்முறை காமன்வெல்த் ஆக்கி போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்படும் என்றும் விளையாட்டுத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாமல் பரிதவித்து வந்த இந்திய அணிக்கு, கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது ஆறுதலான விஷயம். மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற உற்சாகத்தில் இந்திய அணி காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆக்கியில் தங்கப்பதக்கம் கிடைக்காமல் 24 ஆண்டுகள் ஆகின்றன.

காமன்வெல்த் ஆக்கி போட்டியில் இந்திய அணி 2010 மற்றும் 2014 ஆண்டுகளில் இரண்டாம் இடம் பிடித்தது. தங்கப்பதக்கம் இதுவரை வென்றதில்லை. ஆகவே இம்முறை முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வெல்ல அதிக முனைப்பு காட்டும்.

உலக ஆக்கி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. ஆகவே அந்த அணிக்கு தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. எனினும் இந்திய அணி அவர்களுக்கு ஆச்சரியம் அளிப்பார்கள் என்று பலராலும் கருதப்படுகிறது.

சமீப காலமாக மிகச் சிறப்பாக ஆக்கி விளையாடி வரும் இந்தியா, இம்முறை ஆஸ்திரேலியாவை திறம்பட கையாளும் என்று விளையாட்டுத் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற எப்ஐஎச் ஆக்கி ப்ரோ லீக் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, கனடா, வேல்ஸ் மற்றும் கானா ஆகிய நாடுகளுடன் இணைந்து களம் காண்கிறது. இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், ஸ்ரீஜேஷ் திகழ்கின்றனர். ஆகவே இந்த அணிகளை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் எவ்வித சிரமமும் இந்திய அணிக்கு இருக்காது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.